அனில் குமார்: சுவாமி! ஒவ்வொரு மதமும் ஒரு குறிப்பிட்ட மதநூலையும் அதற்கான பாதையையும் பின்பற்றுவதைப் பார்க்கிறோம். ஆனால் சனாதன தர்மம் எண்ணற்ற பாதைகள், நூல்கள் தவிர த்வைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் போன்ற பிரிவுகளையும், நவவித பக்தி, ஷட்தர்சனங்கள், நான்கு வேதங்கள், எண்ணற்ற சாஸ்திரங்கள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இவற்றை எப்படிப் புரிந்துகொள்வது? எப்படி சனாதன தர்மத்தின் கோட்பாடுகளைப் புரிந்துகொண்டு பின்பற்றுவது?

சுவாமி: சனாதன தர்மம் மிகப்புராதனமான ஆன்மீகப் பாதையாகும். மனிதர்களில் எத்தனை வகை நடத்தைகள், மனோபாவங்கள், மனப்பான்மைகள் உள்ளனவோ அவற்றுக்குப் பொருத்தமாக இதன் பிரிவுகள் உள்ளன. இது கடைப்பிடிக்க உகந்ததாக இருப்பதோடு தெய்வீக அனுபவங்களைத் தருகிறது.

ஒரு சிறிய உதாரணம். நீ ஒரு துணியை வாங்கித் தையல்காரரிடம் உனக்கு ஒரு சூட்டுத் தைக்கக் கொடுக்கிறாய். அவர் உனது அளவுகளுக்கு ஏற்ப ஒரு சூட்டைத் தைக்கிறார், அல்லவா? வேறொருவருக்குத் தைத்த சூட்டை நீ அணிந்துகொள்ள முடியாது. அது உனக்குத் தொய்வாகவோ, பிடிப்பாகவோ, நீளமாகவோ, குட்டையாகவோ இருக்கலாம். எனவே, உனது ஆடை உன் அளவுகளுக்குச் சரியாக இருக்கவேண்டும். அதுபோலவே, சிலருக்கு ராமனைப் பிடிக்கலாம், சிலருக்குச் சிவன், கிருஷ்ணன் என வேறொருவரைப் பிடிக்கலாம். தனக்குப் பிடித்த கடவுள்மீது மனம் குவிப்பது அவருக்கு எளிதாக இருக்கிறது. மற்ற மதத்தினர் அனைவரும் ஒரே அளவிலான ஒரேவகை ஆடையை அணிந்துகொள்ள வேண்டியதாகலாம்.

இன்னொரு உதாரணம்: உனக்கு நாதஸ்வரம் தெரியும். ஒரே சுருதி மற்றும் ஒரே தாளத்தை அருகிலிருப்பவர் பாட்டு முழுக்க உடன் வாசிக்கிறார். ஆனால், நாதஸ்வரத்தில் எத்தனை ராகங்களை வேண்டுமானாலும் வாசிக்கலாம். சனாதன தர்மம் நாதஸ்வரத்தைப் போன்றது.

மற்றுமொரு உதாரணம்: பட்ட வகுப்புப் படிக்கும்போது நீ கணிதம், இயற்பியல், கெமிஸ்ட்ரி எடுத்தாலும் (M.P.C), கெமிஸ்ட்ரி, பாட்டனி, ஜுவாலஜி (C.B.Z) எடுத்தாலும், உனக்குக் கிடைப்பது B.Sc. பட்டம்தான். அதுபோலவே வியாச மகரிஷி தொடங்கிய பல்கலைக் கழகத்தில், நீ சாஸ்திரங்கள், வேதங்கள், உபநிஷத்துக்கள் என எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். புராதனமான சனாதன தர்மத்தின் சிறப்பு இதுதான், அது உனக்குத் தேர்ந்தெடுக்கவும் பின்பற்றவும் ஏராளமான சுதந்திரத்தைக் கொடுக்கிறது.

இதோ இன்னுமொரு உதாரணம்: ஒரு மருந்துக் கடைக்காரருக்கும், காப்பிக் கடைக்காரருக்கும் ஒரே நாளில் தலைவலி ஏற்பட்டது. தலைவலி தீருவதற்காக மருந்துக் கடைக்காரர் காப்பி குடிக்கப் போனார், காப்பிக் கடைக்காரரோ ஒரு மாத்திரை வாங்க மருந்தகத்துக்குப் போனார். ஒருவர் காப்பியை நம்புகிறார், மற்றவர் மருந்தை நம்புகிறார். அதுபோலவே, நீ நம்புகிற ஆன்மீகப் பாதையை, உனக்குப் பிடித்த சாத்திரத்தை நீ பின்பற்ற வேண்டும்.

ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0