அனில் குமார்: சுவாமி! கடவுள் எங்கும் நிறைந்தவர், யாவும் அறிந்தவர். அப்படியிருக்க, நாம் கோவில்களுக்குப் போவதும் ஷிர்டி, புட்டபர்த்தி, திருப்பதி போன்ற புண்யஸ்தலங்களுக்கு யாத்திரை போவதும் அவசியந்தானா?
பகவான்: இதுவொரு முட்டாள்தனமான கேள்வி. நீங்கள் உங்களுடைய அறியாமையையும், மனப்பிறழ்வான ‘நாகரீகச்’ சிந்தனைப் போக்கையும் காண்பிக்கிறீர்கள். சொல்வதற்கும் அனுபவத்துக்கும் தொடர்பே இல்லை.
நீங்கள் கடவுள் எங்குமிருக்கிறார் என்கிறீர்கள். அது வெறும் உரத்த வாய்ப் பேச்சுதான். கடவுள் எங்கும் இருக்கிறார் என்கிற வலிமையான நம்பிக்கை உங்களிடம் உள்ளதா? அந்த சர்வ வியாபகமான தெய்வீக அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? வெறும் கிளிப்பிள்ளை போலப் பேசுகிறீர்கள்.
இதோ ஒரு சிறிய உதாரணம். பசுவின் உடலெங்கும் ரத்தம் இருக்கிறது. ஆனால், அதன் மடியிலிருந்துதான் பாலைக் கறக்கமுடியும்! காதைப் பிழிந்தோ, வாலை முறுக்கியோ பாலைப் பெறமுடியாது, அல்லவா? அதுபோலவே, எங்கும் நிரம்பிய கடவுளைக் கோவிலிலும் புண்யஸ்தலத்திலும் உருவகித்து அனுபவிக்க முடியும்.
ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு