அவனுக்கு வேண்டியது அதுதான்
கருணையின் பிறப்பிடம் கடவுள். கடுகளவு நன்மை அல்லது பணிவுடைமை நம்மிடம் இருப்பின், மலையளவு வெகுமதியை அவர் வழங்குகிறார். சிவன் கோயில் ஒன்றில் தொடர்ந்து நீர் கீழே சொட்டும் வகையில், அடியில் சிறு துளையிடப்பட்ட வெள்ளிப்பாத்திரம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பாத்திரத்தை சிவலிங்கத்திற்கு மேலே தொங்க விட்டுவிடுவான் பூசாரி. உலகையே அழிக்கவந்த விஷத்தை விழுங்கியதால் சிவன் அடைந்த வெப்பத்தை குளிர்விக்கவும், சுகமளிக்கவும் அப்படித் தொங்கவிடுவது வழக்கம்.
இரவில் கோயிலை அடைத்துவிட்டு பூசாரி வீட்டிற்குச் சென்றபிறகும், அந்த வெள்ளிப்பாத்திரம் அதே இடத்தில் இருக்கும். அதன்மீது கண்வைத்திருந்த திருடன் ஒருவன் உள்ளே சென்றுவிட்டான்.
ஆனால் பாத்திரத்திற்கு ஆதாரமாக இருந்த கயிறை அவனால் எட்டமுடியவில்லை. எனவே விலை மதிப்பு மிக்க அந்தப் பொருளை எடுக்க அவன் லிங்கத்தின்மீது ஏறினான்.
அப்படி அவன் அந்தப் புனித சிலையின்மீது நின்று கொண்டிருக்கும்பொழுதே, தனது அனைத்து மகிமைகளுடன் சிவன், அவன் முன்தோன்றி “மகனே! நான் உனது சரணாகதியைப் பாராட்டுகிறேன். உனது பாரம் முழுவதையுமே என்மீது போட்டிருக்கிறாய்” என்று கூறினார்.
அப்போதும் அவன் அங்கே ஏணி பெஞ்சு அல்லது ஏற உதவும் வேறுபொருள் இல்லாததால் அந்த வெள்ளிப்பாத்திரத்தை எடுக்க உதவும்படி தான் சிவனை வேண்டினான்.