ஓணம்
பலிச்சக்ரவர்த்தி அவமானமும் ஆசீர்வாதமும் பெற்றது இந்தநாளில்தான். மூவுலகையும் அளந்த இறைவன் வாமன உருவத்துடன் ஆசீர்வதித்தார். மற்றவர்களைவிடத் தனக்கு அதிக பலம் இருந்தக் காரணத்தால்தான், அவன் தன்னைத்தானே பலி என்று அழைத்துக் கொண்டான். ஆணவத்தின் சிறப்பிடமாக இருந்த அரசன் அவன். யாகம் ஒன்றை முனைப்புடன் அவன் செய்து கொண்டிருந்தபோது, இறைவன் பிராமணச் சிறுவன் வேடத்துடன் அவனிடம் வந்தார். தனக்கு வெகுமதியாக வெறும் மூன்றடி மண்கொடுத்தால் போதும் என்றார். ஏராளமானசெல்வத்தையும் சொத்தையும் கேட்கும்படி பலி சிறுவனிடம் கூறினான்; ஆனால் சிறுவனோ, அந்தச் சிறு வெகுமதியே போதுமென்று அடம் பிடித்தான். வந்தவன் இறைவனாகவே இருக்கக்கூடும் எனக் கருதிய பலியின் குரு, அந்தப் புதிய யாசகனை யார்? எவர்? என விசாரிக்கும்படி பலியை எச்சரித்தார். தனது வாயிலுக்கு வந்தவன் இறைவனாக இருப்பினும், அவன் யாசிப்பதைக் கொடுக்கத் தன்னிடம் பெரும் களஞ்சியமே இருக்கிறதே! என எண்ணிய பலி மேலும் மகிழ்ச்சியுற்றான். ஆணவம் அவனை அப்படி நினைக்கவைத்தது.
ஆனால் வாமனர் மண்ணுலகு முழுவதையும் ஓரடியாலும்,
விண்ணை இன்னொரு அடியாலும் அளந்துவிட்டு, மூன்றாவது அடிவைக்க இடம் எங்கே என்று கேட்டவுடன், பலி பணிவுடன் தன் தலையைத் தாழ்த்தி அதன்மீது வைக்கும்படிக் கூறினான்; அதன்முலம் சொர்க்கத்தையும் அடைந்தான். பெருமை இறுதியில் சிறுமையாகிவிடும் என்பதை போதிக்க வந்ததே, இந்த வாமன அவதார நாள். ஆணவம் அடங்கிய அடுத்த நொடியே பலி தூய்மைப்பெற்று, இறைவனிடம் பல வரம் பெறும் பேறு பெற்றான். இறைவன் எப்போதும் அவனைக் காப்பாற்றுவதாக உறுதி அளித்தார். ஒவ்வொரு ஆண்டும் ஒணநாளன்று, உலகில் தான் ஆட்சி செய்த இடத்திற்கு வரவும். அவர்கள் செலுத்தும் மரியாதையை ஏற்றுக் கொள்ளவும் இறைவன் பலிக்கு அனுமதியும் அளித்தார். எனவே வாமன அவதாரத்தையம், பலியின் மனமாற்றத்தையம் குறிக்கும் விழாவே ஒணம்.