ஆன்மீக ஒழுக்கம்
வீழ்ச்சியின் ஆபத்து மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் இழப்புகள் குறித்து மனிதன் எப்போதும் அறிந்திருக்க வேண்டும். பகவான் இந்த உண்மையை ஒரு எளிய, ஆனால் நகைச்சுவையான கதையின் மூலம் அன்பாக விளக்குகிறார்:
ஒருமுறை, ஒரு பெண் , வீட்டின் எஜமானரான தனது கணவரிடம் “எனக்கு ஒரு சத்தம் கேட்கிறது; திருடன் ஒருவன் நுழைந்திருக்கிறான்” என்று சற்று படபடப்புடன் கூறினாள். அதற்கு அவர், “எனக்குத் தெரியும்; என் தூக்கத்திற்கு இடையூறு செய்யாதே. ” என்றார். சில நிமிடங்களில், திருடன் வீட்டிற்குள் வந்துவிட்டதாக கூறினாள். சற்றும் கலங்காமல் “எனக்குத் தெரியும்.” என்றார் கணவர். பின்னர், “அவன் பெட்டியைத் திறக்கிறான்” என்று பீதியடைந்தாள். ஆனாலும், அந்த மனிதன், “எனக்குத் தெரியும்” என்று கூறி அமைதியாக இருந்தார்.
சிறிது நேரம் கழித்து, திருடன் ஓடிவிட்டதாக கூறினாள்.
அவள் கணவனோ முன்பு போலவே “எனக்குத் தெரியும்” என்றார். திருட்டு பற்றி மீண்டும் மீண்டும் எச்சரித்தும் அவர் எந்த கவனமும் செலுத்தவில்லை. இதனால் அவருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. அதேபோல் கடவுள் கொடுக்கும் எச்சரிக்கைகளுக்கு நீங்கள் செவிசாய்ப்பதில்லை. ஆகையால், கண்கள் திறந்திருப்பினும், பேரழிவுகளை சந்திக்க நேரிடுகிறது.
ஆதாரம்: அவதார மொழி அமுதம் (ஸத்ய ஸாயி ஸ்பீக்ஸ்), தொகுதி 3, அத்தியாயம் 25. செப்டம்பர் 15, 1963.