இறைவனுக்குக் குறிப்பிட்ட வடிவம் கிடையாது

ஓவியன் ஒருவன் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்து, தனக்கு நல்ல பேரும் புகழும் தேடிக்கொண்டான். இருப்பினும், இதுவரை கண்ணனுடன் அவனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. பிரபு கண்ணனின் பாராட்டையும் பெற்று விடவேண்டுமென்று அவன் தீவிரமாக முயன்றான். கண்ணனைச் சந்திப்பதற்குரிய நாளும், அனுமதியும் கிட்டிவிட்டது. சந்தித்தபோது, அவருடைய ஓவியத்தை வரைந்து முடிக்கும் வரை ஆடாமல் அசையாமல் இருக்கும்படிக் கண்ணனை வேண்டினான்.

படத்தை வரைந்து முடித்த ஓவியன், ‘’ஒரு வாரத்துக்குள் வண்ணம் தீட்டுவது முடிந்து விடும்’ என்றான். ஓவியன் ஆணவம் பிடித்தவன் என்பது கண்ணனுக்குத் தெரியும். ஒரு வாரம் கழித்து, வண்ண ஓவியத்தை ஒரு வெள்ளைத் துணியில் மூடிக் கொண்டு வந்தான். கண்ணனின் முன்னிலையில் ஓவியத்தைத் திறந்தான்.

கண்ணனுக்கும் ஓவியத்துக்கும் பொருத்தமில்லாமல் இருந்தது. அதைப் பார்த்து ஓவியனே அதிர்ந்து போனான். வியப்பில் மூழ்கிய ஓவியன், ஒரு வாரத்தில் அதை சரி செய்து விடுவதாகக் கூறினான். பற்பல முயற்சிகளை அவன் செய்தான். இருப்பினும் ஒவ்வொரு முறையும் தோல்வியே கண்டான். மனம் சலித்து வெறுத்துப்போன ஓவியன், நகரத்தை விட்டு வெளியேறிவிட விரும்பினான். செல்லும் வழியில் நாரத முனிவரைச் சந்தித்தான்.

“பிரபு கண்ணன் படத்துக்கு வண்ணம் தீட்ட முயல்வது அற்பத்தனமான செயலாகும்” என்று நாரதர் நவின்றார். “கடவுளுக்கு ஒரு குறிப்பிட்ட வடிவம் கிடையாது. ஒவ்வொரு நொடியும் தன் திருமுகத்தை அவரால் மாற்ற முடியும். அவருக்கு வண்ணம் தீட்ட வேண்டுமென்றால், நான் அதற்கு ஒரு வழி சொல்கிறேன். அதன்படி நீ செய்தால் தீட்டி விடலாம்’’ என்று அறிவுறுத்தினார் நாரதர். ஓவியன் செவியில் எதையோ முணுமுணுத்தார் நாரதர். நாரதரின் அறிவுரையை ஏற்றுக் கொண்டு, ஏதோ ஒரு பொருளை அதே வெள்ளைத் துணியால் மூடி, கண்ணனை அடைந்து, “இப்போது உங்கள் முகத்தை நீங்கள் எப்படி மாற்றினாலும் அதைப் போலவே ஓவியமும் இருக்கும்” என்றான்.

துணியைக் கண்ணன் விலக்கிப் பார்த்தபோது அங்கே ஒரு கண்ணாடி இருந்தது. கண்ணாடி மிகக் கச்சிதமாகக் கண்ணனின் முகத்தைப் பிரதிபலித்தது.

எனவே நீ கடவுள் இப்படி இருப்பார், அப்படி இருப்பார் எனக் கற்பனை செய்தால் அது சரியில்லை. இறைவனை வர்ணிக்க உங்களால் இயலாது. அப்படி முயன்றால் அது வீண் முயற்சியே. மனத்தைத் தெளிவாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொண்டு, அதில் பக்தியையும் அன்பையும் நிர்ப்புங்கள். அப்போது இறைவனின் உண்மையான காட்சி உங்களுக்குக் கிட்டும்.

பட விளக்கம் :
செல்வி.சாயினி,
ஸ்ரீ சத்ய சாய் பாலவிகாஸ் மாணவி (மூன்றாம் பிரிவு)

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0