எறிபத்த நாயனார்
தற்சமயம் கரூர் என அழைக்கப்படுகின்ற கருவூரில் அவதரித்த எறிபத்த நாயனார், ஒரு சிறந்த சிவ பக்தர். இவரது நெற்றியிலும், திருமேனியிலும், திருவெண்ணீரு எந்நேரமும், ஒளி வீசிக்கொண்டேயிருக்கும். சிவனடியார் வழிபாட்டில் எவர் கெடுதல் செய்தாலும் அவர்களை மழுவாயுதத்தால் வெட்டி வீழ்த்தும் அளவிற்குப் பக்தி உடையவர்.
ஒரு நாள் கோவிலுக்குப் பூக்கொண்டு சென்ற சிவகாமியாண்டரை அரசு யானைத் தாக்கி பூக்களைச் சிதறடித்தது. அதை கண்ட எறிபத்தர் யானையையும், அதனை அடக்காத பாகர்களையும் வெட்டி வீழ்த்த, செய்தியறிந்து, படையுடன் வந்த புகழ்ச்சோழ அரசர், யானை தன்னுடையது அதனால் தன்னையும் வெட்டுமாறு வாளினைக் கொடுக்க மன்னனின் பக்தியை உணர்ந்த எறிபத்தர், வாளினைப் பெற்று இந்த மன்னனுக்கு முன், நான் சாதாரணமானவன் என்று எண்ணி, தன்னை வெட்டிக் கொள்ள முயன்றார்.
அப்போது வானில் ‘உம்முடைய சக்தியை உணர்த்தவே இதை நடத்தினோம்’ என்று அசரீரி கேட்டது. யானையும், பாகர்களும் உயிர் பெற்றனர். சிவபெருமானின் அருளால் எறிபத்த நாயனார் திருக்கயிலையில் தலைமைப் பதவி பெற்றார்.
ஆதாரம் (References) :
shaivam.org
நாயன்மார் கதை (முதல் மற்றும் இரண்டாம் பாகம்), கி. வா. ஜகந்நாதன், மூன்றாம் பதிப்பு, அல்லயன்ஸ் பதிப்பகம்.