மானக்கஞ்சாற நாயனார்

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள கஞ்சாறூரைச் சேர்ந்த மானக்கஞ்சாறர், சோழ அரசின் சேனாதிபதியாக இருந்தவர் குடியில் பிறந்தவர். இவர் ஒரு சிவபக்தர். இறைவன் திருவருளால் செல்வமும் வளமும் பெற்று வாழ்ந்து வந்தார். தாம் பெற்ற பொருளை சிவனடியார்களுக்கு வழங்கி வழிபடும் தன்மை உள்ளவர்.

நெடுங்காலமாக பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்த அவர், மனம் வருந்தி இறைவனை வேண்டினார். இறைவன் திருவருளால் அவருக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையைச் சீரும் சிறப்புமாக வளர்த்து ஏயர்கோன் கலிக்காம நாயனாருக்கு மணமுடிக்க ஏற்பாடு செய்தார். பொழுது விடிந்தால் திருமணம்.

அப்போது சிவபெருமான் மானக்கஞ்சாறருடைய அடியார் பக்தியை உலகுக்கு உணர்த்த எண்ணினார். கழுத்திலும் தலையிலும் எலும்பிலான மாலை மணிகளுடனும், மார்பில் பஞ்சவடி எனும் மயிர்கற்றையினால் ஆன பூணூலுடனும், மகா விரதம் பூண்ட முனிவராக நாயனாருடைய மனைக்கு எழுந்தருளினார்.

அடியார் வருவதைக் கண்டதும் மானக்கஞ்சாறர் அவரை வரவேற்று, அவர் திருவடியைத் தொழுது வணங்கினார். அடியார் உரு கொண்ட எம்பிரான் அலங்கரிக்கப் பட்ட வீட்டைப் பார்த்து, ஒன்றும் தெரியாதது போல், விசேஷம் என்னவென்று வினவினார். மானக்கஞ்சாறரோ தன் மகளுக்குத் திருமணம் நடக்கப்போவதாகக் கூறி, அவளை அழைத்து அடியார் திருவடியில் விழுந்து வணங்கச் செய்தார்.

அடியாரின் பார்வையோ தம்மைப் பணிந்த பெண்ணின் நீண்ட கூந்தலின் மேல் விழுந்தது. உடனே அவர் கஞ்சாறரிடம், “உன் மகளது கூந்தல் கிடைத்தால் நம் பஞ்சவடிக்குப் பயன்படும்” என்றார்.

திருமணம் நடைபெறவிருக்கும் மங்கலமான வேளையில் பெண்ணின் கூந்தலை வெட்டுவது அமங்கலம் என்று நினைக்காமல், மணமகன் வருந்துவானே என்றும் சிந்திக்காமல், அடியார் வேண்டுவதை உடனே கொடுப்பதையே கொள்கையாகக் கொண்டிருந்த மானக்கஞ்சாறர், ஒரு நிமிடமும் தாமதியாது அலங்கரிக்கப்பட்ட மணமகளின் நீண்ட கூந்தலை அடியோடு அரிந்து அடியாரிடம் கொடுத்தார். அதை வாங்குவதற்குக் கை நீட்டியவாறு நின்றிருந்த அடியார் மறைந்து, பின் உமையவளுடன் எழுந்தருளினார்.

அப்போது, அங்கு மணக்கோலத்துடன் வந்த ஏயர்கோன் கலிகாமர், நிகழ்ந்தவற்றை உணர்ந்து, இறைவன் திருவருளை எண்ணி உருகினார். மனக்கஞ்சாறருடைய மகளை அந்த நிலையிலே திருமணம் செய்துகொண்டு இன்புற்றார். கூத்தன் அருளால் கூந்தலும் வளர்ந்தது.

ஆதாரம் (References) :
shaivam.org
நாயன்மார் கதை (முதல் மற்றும் இரண்டாம் பாகம்), கி. வா. ஜகந்நாதன், மூன்றாம் பதிப்பு, அல்லயன்ஸ் பதிப்பகம்.

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0