கர்ம நிவாரம் சாயிபாதம்!
- உன் கர்மா தீர்ந்தது
- குறையொன்றுமில்லை
- பிறவி உனக்கில்லை
- என்று ஸ்வாமி சொல்லும்
- சுபதினத்திற்காகவே
- தவிக்கிறது
- ஒவ்வொரு ஜீவனும்…
- சாயிஸ்ருதியின் தரிசனத்தில்
- ஸ்வாமி உற்றுப் பார்த்தார்
- புரியாமல் விழித்தேன்
- பொற்பாதம் தொழுதேன்.
- அங்கொருவர் சொன்னார்
- ஸ்வாமி உற்றுப் பார்த்தது
- உன்னையில்லை
- உன் கர்மாவை
- உன் பூர்வமுகத்தை
- புண்ணிய பாவத்தை…
- ஜீவனின்மேல் அவர்பார்வை
- விழும்போதே
- அதன் கர்மக்கணக்கை
- வாசித்துவிடுகிறார்.
- இப்பிறவியில் ஜீவன்
- கடைத்தேறுமா?
- கர்மா தீருமா?
- அதன் அத்தனை
- பிறவிகளையும்
- படம்பிடித்து விடுகின்றன
- பகவானின் கண்கள்!
- உன்னைப்பார்க்குபோது
- முன்பும் முன்பும்
- நீ யார் என்பது
- ஸ்வாமிக்குத் தெரிகிறது!
- கர்மபாக்கி கடன்பாக்கி
- அதை ஜீவன் தீர்க்கும்போது
- பரமாத்மா சாட்சி மட்டுமே
- என்கிறார் பகவான்.
- ஒரு ஜீவனின்
- ஒட்டுமொத்தப் பிறவிகளின்
- கர்மமூட்டை சஞ்சிதம்.
- இந்தப்பிறவியில்
- தீர்த்தாக வேண்டும் என்று
- தீவிரவாதியாய் மிரட்டுவது
- பிராரப்தம்.
- வாவா உன்னைக்
- கவனித்துக் கொள்கிறேன்
- என்று
- அடுத்தபிறவிக்காகக்
- காத்திருப்பது ஆகாமியம்.
- ஸ்வாமி சொல்கிறார்
- உன்வினைக்கேற்பவே
- சுழல்கிறது பிறவி.
- இன்று நிகழ்வதெல்லாம்
- உன்னால் நேர்ந்தவை;
- நிச்சயிக்கப்பட்டவை.
- அவரவர்க்குரிய
- கர்மக்கடிதத்தைக்
- கொடுக்கும்
- அஞ்சல்காரனே நான்.
- அதீதபக்தரென்றால்
- கர்மக்கணக்கை தாண்டியும்
- கருணைபொழிவதுண்டு!
- யாவரேயானாலும்
- கடந்த பிறவிக்கர்மாவைஅவர்
- தீர்த்தாகவேண்டும்.
- மகான்களும் ரிஷிகளும்
- கர்மத் தீர்வுக்காய்
- பிறந்து பிறந்து
- பிறந்ததுமே இறந்து
- பிறவிப்பிணி தீர்ப்பதுண்டு.
- சீதை பட்டதுவும்
- மீரா பட்டதுவும்
- சக்குபாய் துடித்ததுவும்
- தேவகிரியம்மை
- சீதம்மா பட்டதுவும்
- கர்மப் பயனே!கர்மப்பயனே!
- எல்லாப்பிறப்பும்
- பிறந்திளைத்தேன் என்று
- புலம்புகிறார் மணிவாசகர்
- எத்தனை பிறவிகள்!?
- எத்தனை உறவுகள்!?
- அப்பன் எத்தனை அப்பனோ?
- அம்மைஎத்தனைஅம்மையோ?
- என்றுபாடுகிறார் பட்டினத்தார்
- உண்மையான
- அம்மையப்பன் ஆண்டவனே
- அல்லவா?
- நற்கருமப் பலனால்
- பிறவியின் ஒருபாதி வேதனை
- மறுபாதியில் விடுதலை
- முன்பின்னாய் இது மாறும்.
- பூர்வபுண்ணியம்
- வங்கிச்சேமிப்பாயிருந்தால்
- அராஜகம் செய்தாலும்
- அவன்
- சொர்க்கத்தில் மிதப்பான்
- உச்சகட்டப்புகழ்
- உயர்செல்வாக்கு
- புண்ணியம் தீர்ந்ததுமே
- அவனை
- நரகம் தன்மடியில்வாரிப்
- போட்டுக்கொள்ளும்.
- ஏன் நடந்தது
- எதனால் நேர்ந்தது
- என்று கேட்காதே
- எல்லாம் உன் பூர்வமூட்டை.
- நீ செய்ததுதான்
- திரும்புகிறது உனக்கு
- தீராதகால்வலி தலைவலி
- மேல்வலி வயிற்றுவலி
- என்று
- வியாதிகளின்
- நெடுங்கால முற்றுகை.
- காயங்களிலேயே
- எரிந்துகொண்டிருக்கிறது
- காலம்
- கண்ணீரிலேயே
- மூழ்கியிருக்கிறது
- வாழ்க்கை.
- வாழ்வெனும் கடலில்
- ரணங்களே அலைகளாய்
- மீண்டும் மீண்டும்
- பொங்கிவந்து கரையைச்
- சேதப்படுத்துகின்றன.
- வங்கிக் கணக்கிலோ
- குபேர நிதி
- வைரவைடூரியங்கள்
- உடம்பின் நோய்
- அனுமதிப்பதோ
- ஒரு கவளம் சோறும்
- கால்குவளை நீரும்!
- வாழும்வயதில்தனிமரமாவதும்
- பிஞ்சில் உதிர்வதும்
- இளங்குருத்து விபத்தில்
- சிதறிப் போவதும்
- பதறும் வேதனை
- தொடர்கதையாவதும்
- கர்மப்பலனே கர்மப்பலனே
- இன்னொருத்தியின்
- குழந்தையைக்
- குருடாக்கியவளுக்கு
- இப்பிறவியில்
- குருட்டுக்குழந்தை.
- வைத்தியத்தால்
- பலரைப் பரலோகம்
- அனுப்பியவனின் அடுத்தபிறவி
- படுக்கையிலேயே கிடக்கிறது.
- நீர்விரயம் செய்தவனுக்கு
- நீர்சம்பந்த வியாதி.
- உணவை துச்சமாய்
- வீசி எறிந்தவனே
- அடுத்த பிறவியில் அதைக்
- குப்பைத் தொட்டியில்
- பொறுக்குகிறான்.
- பூர்வகொலைகாரனே
- பொய்வழக்குப்போடப்பட்டு
- சிறையில் சிதைகிறான்
- இப்போது.
- செய்யாதது வாராது
- செய்தவினை நுகராமல்தீராது
- எந்தவேதனையும்வாசனையும்
- பூர்வ எச்சம்தான்
- அடுத்தபிறவியில்
- அனுபவிக்கும் மிச்சம்தான்.
- பூர்வத்தில் நீ போட்டது
- இப்போது முளைத்திருக்கிறது
- மூலிகை முளைப்பதும்
- காளான் முளைப்பதும்
- உன்னால்தானே தவிர
- என்னால் இல்லை.
- எதிரொளி எதிர்ச்சொல்
- எதிரொலிதான் வாழ்க்கை!
- காலத்தொலைக்காட்சியில்
- தொடரும் உன்
- கர்மத் தொடர்கதையை
- முடித்துக் கொள்.
- கர்மச் சுழலிலிருந்து
- விடுதலை பெறு.
- மாயன் பதம் பணிந்தால்
- போயபிழையும்
- புகுதருவான் நின்றனவும்
- தூசாகும் என்கிறாள் கோதை.
- கர்மாவை மூட்டைகட்டி
- எங்கும் நீ எறிய முடியாது.
- தீவிரசாதகத்தால் அதை
- எரிக்கலாம். கர்மா
- கொஞ்சம் கொஞ்சமாய்க்
- குறையும் எரியும்.
- அதீத பக்தியால்
- அழுதழுது ஆண்டவனுக்காய்ப்
- பரிதவிப்பதால்
- தைலதாரையாய்ப் புரியும்
- தானதர்மங்களால்
- தியாகத்தால்
- நித்ய நிர்மலப்பண்புகளால்
- சத்யமாய் உன்கர்மா தீரும்!
- அதன்பின் நீ
- பளிங்குப் பனிமலர் பாரிஜாதம்
- என் பதமலரில்
- நித்யவாசம் செய்யும்
- மனோரஞ்சிதம் பவித்ரபத்ரம்!
- பிரேமஸ்வரூபமே!
- புத்தம்புது மலராய் வந்து
- மணக்கப்போகும் உனக்காக
- என் சன்னிதி காத்திருக்கிறது!
- என்றும் சாயிசேவையில்
- கவிஞர்.பொன்மணி
- -ஸ்ரீ சத்யசாயிகவிதைகள்
- ஜெய் சாய்ராம்!