இறைவனின் அடிச்சுவட்டில் செல்க
ஒரு சமயம் நான்கு நண்பர்கள் பஞ்சு வியாபாரம் ஆரம்பித்தனர். பருத்திப் பொதிகளைச் சேமித்து வைக்கும் கிடங்கு (கோடவுன்) ஒன்றும் அவர்களிடம் இருந்தது. பருத்தி விதைகள் காரணமாகக் கிடங்கிற்கு ஏராளமான எலிகள் வந்தன.
எலிகள் பெருகுவதைத் தடுக்க பூனை ஒன்றைக் கொண்டு வந்தனர். அதன் கால்களில் சலங்கைகளைக் கட்டினர். அவர்கள், பூனையை அதிகம் நேசித்ததால் தங்கச் சலங்கையை வாங்கினர்.
ஒரு முறை உயரமான பருத்திப் பொதியிலிருந்து குதித்து, அந்தப் பூனையின் ஒருகால் நொண்டி ஆனது. எனவே அதன்மீது சிறிது வலிமருந்தைத் தடவி புண்பட்ட காலின்மீது நீண்டதுணியைச் சுற்றினார்கள். அவர்கள் போட்ட கட்டு தளர்ந்து அவிழ்ந்து, பின்புறம் நீண்டு கொண்டு வருவதைக் கவனிக்காத பூனை, துணியை இழுத்த வண்ணம் வந்து நெருப்பருகே அமர்ந்தது. துணியில் நெருப்புப் பற்றியது; இங்குமங்கும் தாவ ஆரம்பித்த அது, கிடங்குக்குள் ஓடி விட்டது.
கணநேரத்தில் கிடங்கில் இருந்த பஞ்சு முழுவதும் பற்றி எரிந்து, பஸ்பமாகிவிட்டது, பூனையின் ஒவ்வொரு காலும் ஒவ்வொருவருக்குச் சொந்தம் என்று அந்த நால்வரும் ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருந்தனர்; அதன்படி ஊனமுற்ற காலும் ஒருவருக்குச் சொந்தமாகிறது. மற்ற மூவரும் ஊனமுற்ற காலின் உரிமையாளரிடம் நஷ்டஈடு கேட்டனர்.
விஷயம் நீதிமன்றத்துக்குச் சென்று விட்டது. இரண்டுபக்க
வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி, “ஊனமுற்ற காலுக்கு இதில் எவ்விதப் பொறுப்பும் இல்லை. காரணம், நன்றாக இருந்த கால்கள்தான் கிடங்கிற்கு நடந்து போயிருக்கின்றன. எனவே, நஷ்டஈடு மற்ற மூவராலும் ஊனமுற்ற காலின் உரிமையாளருக்கேக் கொடுக்கப்பட வேண்டும்” என்று தீர்ப்பளித்தார்.
முதல்சிந்தனையில் சரியானது போல் தோன்றும் ஒன்று இரண்டாவது சிந்தனையில் தவறாகி விடலாம். உலக நோக்கில் சரி எனக்கருதக்கூடியவையும் உள்ளன; தெய்வீக நோக்கில் சரி எனக்கருதக்கூடியவைகளும் உள்ளன. தெய்வ நோக்கில் சரி எனக்கருதக்கூடியவற்றைப் பின்பற்ற, தெய்வீக மனிதர்களிடம் நாம் தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களால் உங்களுக்குச் சரியான அறிவுரை கூறமுடியும். நல்ல மனிதர்களிடமிருந்து விலகி நிற்கக்கூடாது. அவர்களைத் தேடி நாம் செல்ல வேண்டும்