அனில் குமார்: சுவாமி! எந்த இரண்டு பேருக்கும் நடுவில் புரிந்துகொள்ளும் தன்மையை நம்மால் பார்க்க முடிவதில்லை; சச்சரவும் வேறுபாடுகளும்தான் உள்ளன. மனிதர்களுக்கிடையில் ஒற்றுமையோ சகோதரத்துவமோ பார்க்க முடிவதில்லையே, ஏன்?
பகவான்: மனிதர்களிடையே ஒற்றுமை வேற்றுமை என்னும்போது நீங்கள் தெளிவாக ஒன்றை அறிந்துகொள்ள வேண்டும். அவற்றுக்குக் காரணம் என்ன? இன்றைக்கு இரண்டு நபர்களுக்கிடையே புரிதலே இல்லை. புரிதல் இல்லாததால்தான் எல்லாவகை சண்டைகள், விரோதம், வேறுபாடுகள் எல்லாம் ஏற்படுகின்றன.
எனவே, ஒருவருக்கொருவர் இசைந்து போவதில்லை. புரிதல் இருந்தால்தான் இசைவு (adjustment) இருக்கும். ஆனால் இன்றைக்கு நீங்கள் எதிரெதிர்த் திசைகளில் நகர்கிறீர்கள். முதலில் அட்ஜஸ்ட் செய்துகொண்டு பிறகு ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளலாம் என்று நினைக்கிறீர்கள். அது தவறு. முதலில் புரிந்துகொள்ள வேண்டும், பிறகு அட்ஜஸ்ட்மெண்ட் எளிதாகிவிடும்.
ஒரு சிறிய உதாரணம். உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே நல்ல புரிதல் இருந்தால், அலுவலகத்திலிருந்து நீங்கள் தாமதமாக வீடு திரும்பினாலும் அவர் பொருட்படுத்துவதில்லை. அவர் உங்கள்மீது பரிதாபமும் பரிவும் கொள்கிறார். அக்கறையோடும் அன்போடும் உங்களுக்கு காப்பி கொடுக்கிறார். ஒருவேளை சிறிதளவு தவறான புரிதல் இருந்தால், ஐந்து நிமிடம் தாமதம் ஆனாலும், வீட்டில் ஓர் உள்நாட்டுப் போரே நடக்கும்.
ஏன்? புரிதலின்மையின் காரணமாக அவரால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிவதில்லை. “இவ்வளவு நேரமா எங்கே போயிருந்தீங்க? யார்கூட இருந்தீங்க?” என்றெல்லாம் கேள்வி கேட்பார். ஆகவே, சரியாக இசைந்து வாழ, புரிதல் மிகவும் அவசியம். இதைப் புரிந்துகொண்டால், சமுதாயத்தில் பல பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு