அனில் குமார்: சுவாமி! ஆதிசங்கரர் சிறிய வயதிலேயே சமாதியடைந்தார் என்று அறிகிறோம். என்ன காரணமாக இருக்கமுடியும்?

பகவான்: அத்வைத ஸ்தாபகரான ஆதிசங்கரர் சிறுவயதிலேயே சமாதியடைந்தது உண்மைதான். பிரஸ்தானத்ரயம் என்று அறியப்பட்ட உபநிஷதங்கள், பிரம்மசூத்திரங்கள், பகவத்கீதை ஆகியவற்றுக்கு, ஞான மார்க்கத்தை வலியுறுத்தி அவர் உரை எழுதினார். பல பக்தி ஸ்தோத்திரங்களை எழுதினார். தேசமெங்கிலும் சஞ்சாரம் செய்து பீடங்களை (பக்தி மற்றும் ஆன்மீகக் கல்விக்கான மையங்கள்) ஸ்தாபித்தார். சனாதன தர்மம் என்னும் புராதனமான, காலத்தைக் கடந்த, இந்திய ஆன்மீகக் கலாசாரத்தின் அடையாளம் அவர்.

மிகப்பழமையான புண்யத் தலமான காசிக்கு அவர் சென்றார். அங்கே விஸ்வநாதரிடம் அவர் தனது மூன்று தவறுகளுக்கு மன்னிப்புக் கோரினார். முதல் தவறு, தான் சொல்வதற்கு எதிராகத் தானே நடந்துகொண்டது. ‘வாசுதேவஸ் ஸர்வமிதி’ (கடவுள் எங்குமிருக்கிறார்) என்று கூறியபோதிலும், கடவுளைப் பார்க்கக் காசிக்கு வந்த தவறு.

இரண்டாவது தவறு, கடவுள் நமது விளக்கத்துக்கோ வர்ணனைக்கோ அப்பாற்பட்டவர் (யதோ வாசோ நிவர்த்தந்தே) என்றபோதும் தெய்வீகம் குறித்து நூல்கள் எழுதியது.

மூன்றாவது தவறு, ஒரே கடவுள் பலவாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட போதிலும் (ஏகோஹம் பஹுஸ்யாம்), எல்லோருக்குள்ளும் அதே கடவுள் இருந்த போதிலும் (ஆத்மவத் சர்வபூதானி), அந்த உள்ளுணர்வு எல்லோருக்குள்ளும் இருந்தபோதிலும் (ப்ரக்ஞானம் பிரம்மா), தனது சிஷ்யர்களைத் தன்னிலிருந்து வேறாகக் கருதிப் பல மடங்களை ஸ்தாபித்தது.

அவருடைய வாழ்க்கை குறித்து இன்னொரு சம்பவமும் கேள்விப்பட்டிருக்கலாம். சன்னியாசம் மேற்கொள்ள அவர் தன் அன்னையிடம் அனுமதி வேண்டினார். முதலில் அன்னை அதை ஒப்புக்கொள்ளவில்லை. ஒருநாள் சங்கரர் அருகிலிருந்த நதிக்கு நீராடச் சென்றார். திடீரென்று ஒரு முதலை அவரது காலைக் கவ்விக்கொண்டது. சங்கரர், “அம்மா, அம்மா, இந்த முதலை என்னைத் தண்ணீருக்குள் இழுக்கிறது. சன்னியாசி ஆவதற்கு நீ என்னை அனுமதிக்காவிட்டால் அது என்னை விடாது” என்று அவர் கதறினார்.

இறுதியாக அவருடைய அன்னையார் அனுமதி கொடுத்ததும் முதலை சங்கரரை விட்டுவிட்டது. இதன் உட்பொருள் என்னவென்றால், நதி என்பது உலகவாழ்க்கை (சம்சாரம்), முதலை என்பது விஷயம் (புலனின்ப நாட்டம்). சன்னியாசம் அல்லது பற்றின்மையே இவற்றிலிருந்து விடுதலை தருவது.

தனக்கென ஏற்றுக்கொண்ட பணிகளைச் செய்து முடித்தவுடனே சங்கரர் தனது உடலை உதறித் தள்ளினார். ஏனென்றால் அவரது சீடர்கள் அந்தப் பணிகளை மேற்கொண்டு தொடர்வார்கள் என்பதில் அவருக்கு உறுதியிருந்தது. அவர்கள்தாம் அத்வைத சித்தாந்தத்தின் ஒளியை உலகெங்கிலும் பரப்பப் போகிறவர்கள். அவர்களும் அந்தப் பணியை வெற்றிகரமாகச் செய்வதற்கான உயர்தகுதியும் மேன்மையும் கொண்டிருந்தனர்.

ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0