அமர்நீதி நாயனார்
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பழையாறை எனும் ஊரில் அவதரித்தவர் அமர்நீதியார். சிவ பக்தி மிகுந்த இவர், சிவனடியார்களுக்கு அமுது அளித்து, அவர்களுக்கு உரிய கௌபீனம், கீள் முதலிய ஆடைகளை அளிப்பதையே தாம் பெற்ற செல்வத்தின் பயன் என்று கருதி வாழ்ந்து வந்தார். வணிகர் குலத்திற் சிறந்து விளங்கிய இவர் பொன், மணி, முத்து ஆகியவற்றைப் பல்வேறு நாடுகளிலிருந்துக் கொணர்ந்து, வியாபாரம் செய்து வந்தார். நடமாடும் திருக்கோயில்களாக விளங்கிய சிவனடியார்களின் பெருமையை நன்கு உணர்ந்த நாயனார், திரு நல்லூர் என்ற புனிதத் தலத்தில் திருமடம் ஒன்றைக் கட்டி, திருவிழாக் காலங்களில் அங்கு வரும் அனைத்து சிவனடியார்களுக்கும் வயிராற உணவளித்து அவர்களுக்கு ஏற்ற ஆடைகளை வழங்குவார்.
இவரது பெருமையை உலகுக்கு உணர்த்த எண்ணிய ஈசன், ப்ரம்மச்சாரியைப் போல் வேடமிட்டு ஒரு தடியில் இரண்டு கௌபீனங்களோடுத் திருமடத்திற்கு வந்து, அமர்நீதியாரிடம் ஒரு கௌபீனத்தைக் கொடுத்து, நீராடிவிட்டு வந்துப் பெற்றுக் கொள்வதாகக் கூறிச் சென்றார். கௌபீனம் ஈசன் அருளால் மறைந்து விட்டது. மழையில் நனைந்து வந்த அடியார், தன்னிடம் இருந்த கௌபீனம் நனைந்து விட்டதாகவும், அமர்நீதியாரிடம் கொடுத்துச் சென்ற கௌபீனத்தைத் தருமாறும் கேட்டார். அமர்நீதியார் வைத்த இடத்தில் கௌபீனம் காணவில்லை. நடுங்கியபடி வேறு புதிய கௌபீனத்தைக் கொணர்ந்து அடியாரிடம் கொடுத்து நடந்ததைக் கூற, அடியார் கோபமடைந்தார். அமர்நீதியார் தொலைந்த கௌபீனத்திற்குப் பதில் பொன்னும் மணியும் கொடுப்பதாக மன்றாடினார்.
அனைத்தையும் மறுத்துப் பின் தன் கௌபீனத்திற்குச் சமமான எடையுள்ளக் கௌபீனம் வேண்டும் என்று கேட்டார். உடனே அமர்நீதியார் தராசின் ஒரு தட்டில் அடியாரின் இன்னொரு கௌபீனத்தையும், மறு தட்டில் நிறைய கௌபீனங்களையும், பொன்னையும், பொருளையும் வைத்தார். ஆனால் தராசு சமமாவதற்குப் பதிலாக, அடியாரின் தட்டு கீழ்நோக்கிச் சென்றது.
அமர்நீதியார், இனி தட்டில் வைப்பதற்கு பொருள் ஏதும் இல்லாமல், தராசை மனைவியோடும் மகனோடும் வலமாக வந்து, “சிவபெருமானுடைய நீற்றில் உண்மையான அன்பு பிறழாமல் நாங்கள் இருந்தோம் என்றால் தராசு சமமாக நிற்க வேண்டும்” என்று சொல்லி, பஞ்சாக்ஷர மந்திரத்தை ஓதிய படியே மனைவியையும், மைந்தனையும் தட்டில் ஏற்றிய பின் தாமும் ஏறினார். அப்போது உண்மை அன்பராகிய அமர்நீதியாருடைய தொண்டு, தனக்குச் சமமாக நின்றமையால் கௌபீனம் வைத்திருந்த தட்டு மேல் எழுந்தது. இரண்டு தட்டுகளும் ஒத்து நின்றன. அருகில் இருந்தக் கூட்டத்தினர் இந்த அதிசயத்தைக் கண்டு கை தொழுது வணங்கினர்.
அப்பொழுது வானில் உமையுடன் சிவபெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். அமர்நீதியார் தன் குடும்பத்தைச் சிவபக்திக்குத் தியாகம் செய்ததால், சிவபெருமான் தராசைத் தெய்வ விமானமாக்கி, அக்குடும்பத்தை சிவலோகம் அழைத்துச் சென்று, சிவகணங்களாக்கினார்.
ஆதாரம் (References) :
shaivam.org
நாயன்மார் கதை (முதல் மற்றும் இரண்டாம் பாகம்), கி. வா. ஜகந்நாதன், மூன்றாம் பதிப்பு, அல்லயன்ஸ் பதிப்பகம்.