அனில் குமார்: சுவாமி! கடவுள் குணம் குறிகள் அற்றவர். சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களுக்கு அவர் அப்பாற்பட்டவர். ஆனால் நாம் இந்த குணங்களில் தளைப்பட்டிருக்கிறோம். அப்படியிருக்க, நாம் எப்படி இறையனுபூதி பெறுவது?
பகவான்: கடவுளுக்கு இரண்டு தன்மைகள் உண்டு. நாம் அவரை குணம் குறிகள் கொண்டவராகவும், அவை இல்லாதவராகவும் அனுபவிக்க முடியும். நீங்கள் ஒன்றை முக்கியமாக அறியவேண்டும்: குணங்களிலே கடவுள் இருக்கிறார். அவை அவரிடம் இல்லை. தம்மில் தெய்வீகம் இல்லையெனில் குணங்களால் செயல்பட முடியாது. தங்கம் ஆபரணத்தில் இருக்கிறது, ஆனால் ஆபரணம் தங்கத்தில் இல்லை. பானைகள் களிமண்ணால் செய்யப்படுகின்றன, ஆனால், களிமண் பானையால் செய்யப்படுவதில்லை. வெள்ளிப்பொருள், ஒரு கிண்ணமோ தட்டோ, வெள்ளியால் செய்யப்படுகிறது. ஆனால் கிண்ணமோ தட்டோ வெள்ளிக்குள் இல்லை.
மற்றோர் உதாரணம், மின்விளக்கு எரியும், மின்விசிறி சுற்றும், ரேடியோ, டி.வி. போன்றவை மின்சாரக் கருவிகளுக்குச் செயல்பட மின்சாரம் தேவை. ஆனால் இவற்றில் எவையுமே மின்சாரத்துள் இல்லை. அதுபோலவே, கடவுள் குணங்களில் இருக்கிறார். ஆனால் குணங்கள் கடவுளில் கிடையாது. எனவே, ஒருவகையில் நாம் கடவுள் குணங்குறி உள்ளவர் என்று கூறலாம். அதே நேரம் அவர் குணங்குறி அற்றவரும் கூட. அதாவது அவர் சகுணமும், நிர்குணமும் ஆவார்.
ஒவ்வொரு மனிதனிடமும் சத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்கள் உள்ளன. ஆனால் அவனது எண்ணம், உணர்வு, செயல் ஆகியவற்றில் இம்முன்றில் ஒன்று மற்ற இரண்டைவிடத் தூக்கலாக இருக்கிறது. இந்த மூன்று குணங்களையும் கடந்தாலொழிய நாம் உண்மையிலேயே கடவுளை உணரமுடியாது.
ஓர் உதாரணம்: நீ உன் நெஞ்சைப் பார்க்கவேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும்?
முதலில் உன் மேல்கோட்டு, அடுத்துச் சட்டை, பின்னர் பனியன் இவற்றை அகற்றவேண்டும், அல்லவா? அதுபோலவே, உன் நெஞ்சு என்னும் தெய்வீகத்தைப் பார்க்கவேண்டுமென்றால், முதல் தமஸ் என்கிற மேல்கோட்டை நீக்கவேண்டும், பிறகு ரஜஸ் என்கிற சட்டையை நீங்கவேண்டும், அடுத்து சத்வம் என்னும் பனியனை நீக்கவேண்டும்.
ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு
Help Desk Number: