அனில் குமார்: சுவாமி! கடவுளின் வடிவுள்ள தன்மை மற்றும் வடிவற்ற தன்மைபற்றிக் கூறுங்கள்.

பகவான்: இங்கேதான் பலர் குழம்பிவிடுகிறார்கள். உருவம் என்பதே இல்லாவிட்டால் உனக்கு எங்கிருந்து உருவற்றது கிடைக்கும்? உருவமில்லாததை நீ எப்படிக் கற்பனை செய்வாய்? உனக்கு ஓர் உருவம் இருக்கிறது, அதனால் நீ உருவமுள்ள கடவுளைப்பற்றித்தான் சிந்திக்க முடியும். உதாரணமாக, ஒரு மீன் கடவுளை நினைத்தால் அவரை ஒரு பெரிய மீனாகத்தான் கற்பனை செய்யும். அப்படியே, ஒரு எருமைமாடு கடவுளை நினைத்தால் அதனால் ஒரு பெரிய எருமைமாடாகத்தான் கடவுளை நினைக்க முடியும். அதுபோல, மனிதன் கடவுளை மனிதவடிவில் இருப்பதாகத்தான் – ஒரு லட்சிய மனிதனாக – எண்ணுவான்.

உருவமுள்ள கடவுளை ஆதாரமாகக் கொண்டு, உருவமற்ற கடவுளைக்கூடத் தியானிக்கமுடியும். ஓர் உருவம் இல்லாமல், உருவமற்றதை வருவிக்க முடியாது.

இதோ ஒரு சிறிய உதாரணம்: நீங்கள் எல்லோரும் கொடைக்கானலில் ஒரு ஹாலில் சுவாமி முன்னால் உட்கார்ந்து சுவாமி பேசுவதைக் கேட்கிறீர்கள். இது உருவத்தோடு கூடியதொரு அனுபவம். பின்னர் நீங்கள் வீட்டுக்குப் போகிறீர்கள். சில நாட்களுக்குப் பின்னால், இங்கே நடந்ததை மீண்டும் யோசித்துப் பார்க்கிறீர்கள். இந்தக் காட்சி முழுவதையும் மனக்கண்முன் கொண்டுவருகிறீர்கள். சுவாமி உங்கள் இடத்துக்கு உண்மையில் வருகிறாரா? இந்த அறை உங்கள் வீட்டில் உள்ளதா? இங்கிருக்கும் எல்லோருமே அங்கே இருக்கிறீர்களா? இல்லை. இந்த நேரடி அனுபவத்தை நீங்கள் மனதில் சித்திரிக்கும்போது, உங்களுக்கு இங்கிருப்பது போன்ற அனுபவம் கிடைக்கிறது. இங்கு நீங்கள் பார்ப்பது சாகாரம் (வடிவம் உடையது), அங்கே அனுபவிப்பது நிராகாரம் (வடிவம் இல்லாதது). ஆக, உருவற்றதன் ஆதாரம் உருவத்தில் உள்ளது. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.

மற்றோர் உதாரணம்: இங்கே பால் இருக்கிறது. அதைக் குடிக்கவேண்டும். அதற்கு ஒரு கிண்ணம் அல்லது தம்ளர் தேவை, அல்லவா? அதுபோலவே கடவுளை (பால்) வழிபட ஒரு வடிவம் (கிண்ணம்) தேவைப்படுகிறது.

ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0