சிவன்
அடியார்கள் வழிபடும் சிவ வடிவத்தின் உட்பொருள் என்ன என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்: கணநேரத்தில் அனைத்து உயிர்களையும் அழிக்கக்கூடிய ஆலஹால விஷம், அவருடையக் கழுத்தில் உள்ளது. கங்கைத் தீர்த்தம் இப்போதும் எப்போதும், எல்லா நோய்களையும் குணப்படுத்தக்கூடியது: அந்தப் புனித கங்கை அவரது தலைமீது உள்ளது. நெற்றியில் ஞானக்கண் பெற்றிருக்கிறார். தலையில் குளுமையான நிலாவை அணிந்திருக்கிறார். அவருடைய மணிக்கட்டுகள் கணுக்கால்கள், தோள்கள், கழுத்து ஆகியவற்றில் பயங்கரமான பாம்புகள் நெளிகின்றன. அவைகள் வெறும் பிராணவாயுவை உட்கொண்டு உயிர்வாழ்கின்றன. சிவன் வாழுமிடம் மயானத்தில் உள்ளப் புதைகுழி, எரிக்குமிடம் ஆகியவையே, அதனால் அது ருத்ரபூமி என்றழைக்கப்படுகிறது. அந்த இடம் அஞ்சவேண்டிய இடமல்ல; மங்களகரமான இடமே.
ஏனெனில் அனைவருடைய வாழ்வும் அங்குதானே முடிவடைகின்றன. சிலருக்கு இந்தப் பிறவியோடு முடிந்துவிடும் அல்லது இன்னும் சில பிறவிகளுக்குப் பிறகு முடிவுறும். சாவைப்பார்த்து ஒதுங்கவோ, பயப்படவோ தேவையில்லை என்பதை சிவன் போதித்துக் கொண்டிருக்கிறார். மகிழ்ச்சியுடனும் துணிவுடனும் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
சிவன் திருவோட்டுடன் சுற்றித்திரிவதாகவும் சொல்லப்படுகிறது. துறவு, பற்றின்மை, பாவபுண்ணிய வேறுபாடின்மை முதலியவற்றை அது போதிக்கிறது; இவ்வியல்புகளை நாம் பின்பற்றினால் அவை சிவனிடம் நம்மை அழைத்துச்செல்கின்றன. சாவை வெல்லக் கூடியவரும் சிவனே. (ம்ருத்யுஞ்ஜயா) காமாரி என்றொருப் பெயரும் (ஆசையை அழிப்பவர்) அவருக்கு உண்டு. இந்த இரு பெயர்களும் ஆசையை அழிப்பவனால் மரணத்தை வெல்ல முடியும் எனும் தத்துவத்தைச் சுட்டுபவை. ஆசை செயலாகவும், செயல் விளைவாகவும் விளைவு பந்தமாகவும் உருவெடுக்கிறது; பந்தம் பிறப்பை அளிக்கிறது, பிறப்பு இறப்பில் முடிகிறது.
லிங்கமும் ஈஸ்வரனின் சின்னமே; எல்லா வடிவங்களையும் தன் வடிவத்தில் அடங்க அனுமதிப்பது அது. உயிர்கள் மிகமிக விரும்பவேண்டிய வெகுமதி, பொருள் பொதிந்த வெகுமதி ஒன்று பிரபஞ்சத்தில் உளது. அதை அருள்பவர் சிவனே. அதுதான் இறுதிநிலையான சாவு. அதற்காகத்தான் ஒருவர் பாடுபட வேண்டும். அந்த முடிவை உறுதிபட அளிப்பவர் சிவனே. முதலில் உன் அகத்திலுள்ள இறைவனை உணர்வாயாக, அதற்குப் பின்பு நீ புற உலகினுடன் தொடர்பு வைத்திருப்பினும் அது உனக்குத் தொல்லைத் தராது. ஏனெனில் அந்தப் புறஉலகு இறைவனின் உடம்பு என்பதை அப்போது நீ புரிந்து கொள்வாய், ஆனால் நீ புற உலகில் முதலில் ஈடுபட முயல்வாயாகில் அதற்குப் பின்பு இறைவனையும் லெளகீகமான ஒரு பொருளாகவே காண்பாய், மீண்டும் மேற்படி இரண்டு ஆன்மீக வழிகளில் ஒன்றைப் பின்பற்றி இறைவனை அடைய நீ முயல்வாயாக. இறைவனுடைய கட்டளையைப் பின்பற்றுவாயாக. அப்போது இறைவன் மகிழ்ச்சியோடு உன்னை மேம்படுத்துவார்; அங்கே இறைவனை நீ உணர்வாய். வழி எதுவாகவும் இருக்கலாம்; ஆனால் இறைவனை அடையும் பணி ஒருவருக்கு தவிர்க்க முடியாததாகும்.
பெருந்தன்மை, மங்களம் என்பவை சிவன் என்பதன் பொருள். சர்வ மங்களமானவர் அவர். அதாவது எல்லா பெருந்தன்மையும் மங்களமும் உடையப் பெற்றவர். ஸ்ரீ என்பது மேற்படி குணங்களைக் குறிப்பதுதான். அந்த குணங்கள் சிவனது நாமத்தில் அடங்கியிருப்பதால் சங்கரன், ஈஸ்வரன் முதலிய நாமங்களுக்கு முன்னால் ‘ஸ்ரீ’ சேர்க்கப்படுவதில்லை. அது அவதாரங்களுடைய நாமங்களுடன் சேர்க்கப்படுகின்றது. ஏனெனில் அவர்கள் வந்த நோக்கம் நிறைவேறியபின் அவர்களுடைய உடம்பும் அழிந்து விடுகின்றது. மற்ற மனிதர்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்திக் காட்டவே அந்த முன்னெழுத்து (ஸ்ரீ) பயன்படுத்தப்படுகின்றது. சிவன் நிரந்தரமாக பெருந்தன்மையுடன் மங்களகரமாக இருப்பதால் அந்த முன்னெழுத்து அவசியமற்றதாகிறது. சிவனை தட்சிணாமூர்த்தி அதாவது குருக்களின் குரு என்றும் போற்றுவதுண்டு. பொறுமை, மன்னிப்பு மனப்பான்மை ஆகியவற்றிற்கு சிவனின் வடிவமே பெரும் பாடமாக அமைகிறது.
ஆலகால விஷம் அவரதுத் தொண்டையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. நன்மை நல்கும் மூன்றாம் பிறையைத் தலையில் அணிந்தவர் அவர்; மூன்றாம் பிறையை அனைவரும் ஆவலுடன் பார்ப்பர். எல்லாவிதமான தீய குணங்களிலிருந்தும் மனிதன் விலகி நிற்க வேண்டும், என்ற பாடத்தையும், தன்னால், முடிந்த அளவு நன்மைகளைச்செய்து பிறர்க்கு உதவ வேண்டும் என்ற பாடத்தையும் அது போதிக்கின்றது. தனது திறமைகளை ஒருவன் தனது சுயநலத்திற்கு பயன்படுத்துவானாகில், பிறரைத் தாழ்த்துவதற்காக தீய செயல்களில் ஒருவன் இறங்குவானாகில் அது அவனுடைய சொந்த அழிவிற்கே வழிவகுத்துவிடும்.