திருநாவுக்கரசர்

தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான திருநாவுக்கரசர், இறைவனிடம் தம்மைத் தாசனாக பாவித்து பக்தி செலுத்தியவர். மனதால் இறைவனைத் தியானம் செய்வது, நாவால் தேவாரப் பதிகங்கள் பாடுவது, உடலால் திருக்கோயில் உழவாரப்பணி செய்வது என மனம், மொழி, மெய் ஆகிய மூன்றாலும் திருத்தொண்டு ஆற்றியவர்.

பண்ருட்டி அருகே, திருவாமூர் என்ற ஊரில், புகழனாருக்கும், மாதினியாருக்கும் புதல்வராகப் பிறந்த திருநாவுக்கரசரின் இயற்பெயர் மருள்நீக்கியார். அவருடைய தமக்கை திலகவதியார். கல்வியிலும், அறிவிலும் சிறந்து விளங்கிய மருள்நீக்கியாரை, அந்நாட்டு அரசன் சமண மதத்தைத் தழுவச் செய்தான். சமணர்களால் தருமசேனர் என்றழைக்கப்பட்டார். மேலும், தம் அறிவுத் திறனால், அவர்களுக்கு ஆசார்யரானார். உள்ளத்தை சிவனுக்கும், அறிவையும், ஆசாரத்தையும் சமண நெறிக்கும் கொடுத்து, திருப்பாதிரிப் புலியூரில் இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

இந்த இரட்டை வாழ்க்கையிலிருந்து தருமசேனரை விடுவிக்க எண்ணிய சிவபெருமான், அவருக்கு சூலைநோய் (தீராத வயிற்று வலி) வரச் செய்தார். சமணர்களின் மந்திரங்களாலும், மருத்துவத்தாலும் குணப்படுத்த முடியாமல் உயிர் போகும் நிலையில் இருந்த தருமசேனர், ஒருநாள் இரவோடு இரவாக, திருவதிகையிலிருந்த தம் தமக்கைத் திலகவதியாரிடம் சென்று சரணடைந்தார். திலகவதியார் தம்பிக்கு, பஞ்சாட்சர மந்திரம் சொல்லி, திருநீறு பூசி திருவதிகை வீரட்டானேஸ்வரர் சன்னதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு மருள்நீக்கியார் ‘கூற்றாயினவாறு விலக்ககிலீர்’ என்ற தேவாரப் பதிகத்தைப் பாட, சூலை நோய் உடனே நீங்கியது. இறைவன் அவரை ‘நாவுக்கரசர்’ என்றழைத்தார். அன்று முதல் இறைவனைப் போற்றிப் பாடத் துவங்கினார்.

சமணர்கள் தம் கூட்டத்திலிருந்து பிரிந்து சென்றதற்காக நாவுக்கரசர் மேல் சினம் கொண்டு, மன்னனிடம் புகார் செய்தார்கள். அவன் நாவுக்கரசரை நஞ்சு அருந்தச் செய்தும், சுண்ணாம்புக் கால்வாயில் இட்டும், கல்லைக் கட்டிக் கடலில் போட்டும் துன்புறுத்தினான். அத்துன்பங்களை அவர் இறைவன் அருளால் வென்றார்.

இறைவனால் ஆட்கொள்ளப் பெற்ற நாவுக்கரசர் சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்று பதிகங்கள் பாடினார். தில்லையை தரிசித்து சீர்காழி சென்றபோது, அங்கே திருஞானசம்பந்தர் நாவுக்கரசரை ‘அப்பரே’ என்று சொல்லி வரவேற்றார். அதனால் அப்பர் என்ற பெயரும் பெற்றார்.

திங்களூர் சென்று, தம்மை இறைவனாக வழிபட்டு வந்த அப்பூதி அடிகளைச் சந்தித்தார். நாவுக்கரசருக்கு உணவு பரிமாற இலை கொணரச் சென்ற அப்பூதியடிகளின் புதல்வன் பாம்பு தீண்டி இறக்க, திருப்பதிகம் பாடி அச்சிறுவனை உயிர்ப்பித்தார்.

பஞ்சம் கண்ட திருவீழிமிழலையில் பதிகம் பாட, இறைவன் ஆலயத்துப் படியில் காசு வைத்து அருளினான். அவற்றைக்கொண்டு பஞ்சம் களைந்தார்.

பிறகு வேதாரண்யத்தில் வேதங்கள் அடைத்துச் சென்றக் கதவைப் பதிகம் பாடித் திறக்கச் செய்தார்.

பின்னர் திருக்கயிலையைத் தரிசிக்க விரும்பிய அப்பர், தளர்ந்த உடலுடனும், தளராத உள்ளத்துடனும் கால்கள் தேய்ந்து, கைகள் தேய்ந்து, உடம்பே தேய உருண்டுச் சென்றார். சிவபெருமான் முனிவர் வேடம் பூண்டு, அவரைத் தடுத்தார். அப்பருடைய தளரா முயற்சியைக் கண்டு, அருகில் ஒரு பொய்கையைக் காட்டி, “இதில் மூழ்கி, திருவையாற்றில் எழுந்தால் யாம் திருக்கயிலை தரிசனம் தருவோம்” என்று கூறி மறைந்தார். மீண்டும் பழைய உடலைப் பெற்ற அப்பர் பொய்கையிலே மூழ்கி எழும்போது திருவையாற்றில் இருந்தார். அங்கே திருக்கயிலைக் காட்சியைக் கண்டு இன்புற்றார்.

பலகாலம் திருப்புகலூரில் தங்கி தேவாரப் பதிகங்கள் பாடியும், உழவாரப்பணிகள் செய்தும் வந்தார். அங்கே இந்திரனாலும் அரம்பையராலும் (தேவ கன்னிகைகள்) சோதிக்கப்பெற்றார். அச்சோதனைகளில் வென்றார் நாவுக்கரசர்.

அவர் பாடிய பதிகங்கள் பல, ஆனால் அவற்றுள் நம்மிடம் இருப்பது 312 பதிகங்கள் மட்டுமே. கடைசியில் புகலூரில் இறைவன் திருவடி சேர்ந்தார்.

ஆதாரம் (References) :
shaivam.org
நாயன்மார் கதை (முதல் மற்றும் இரண்டாம் பாகம்), கி. வா. ஜகந்நாதன், மூன்றாம் பதிப்பு, அல்லயன்ஸ் பதிப்பகம்.

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0