பெருமிழலைக் குறும்ப நாயனார்

புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள பெருமிழலை எனும் ஊரில் அவதரித்த குறும்பனார், ஆண்டவனிடத்தில் அன்பும் அடியார்களுடைய உறவில் ஆர்வமும் உடைய பெரியவர்.

அடியவர்களை வரவேற்று உபசரித்து, அறுசுவை உணவு அளித்து அவர்களுக்குத் தேவையான பொருட்களை குறிப்பால் அறிந்து வழங்குவார். இறைவன் திருவருளே அழியாத செல்வம் என்ற உணர்வுடன் வாழ்ந்தவர்.

உலகம் முழுவதும் பரவியிருக்கும் சிவனடியார்களின் மேல் அன்பு கொண்டிருந்த அவருக்கு பழந்தொண்டர்களைப் பாடி உலகுக்கு திருத்தொண்டர் பதிகத்தை வழங்கிய சுந்தரமூர்த்தி சுவாமிகளிடத்தில் அளவு கடந்த பக்தி உண்டாயிற்று. அவரது புகழைப் பேசியும் நினைந்தும் இன்புற்ற குறும்பனார், அவரை சென்று தரிசனம் செய்து பின் அவரைத் தம் குருவாக ஏற்று தியானித்தவாறே இருந்தார். குரு பக்தி செய்தலே இறையருளைப் பெற சிறந்த வழி என்ற உறுதியுடன் உபவாசம் செய்ததால் அவருக்கு அஷ்டமா சித்திகளும் கைவந்தன. திருவைந்தெழுத்தை (பஞ்சாட்சரம்) தம் உயிர் மூச்சாக நினைந்து தவம் புரிந்தார்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவ்வப்போது எவ்விடத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை குறும்பனார் உணர்ந்து கொண்டு வந்தார். சுந்தரர் திருவஞ்சைக் களம் சென்று அங்கிருந்தபடியே கைலாயம் செல்லப் போகிறார் என்பதையும் தம் உள்ளுணர்வால் உணர்ந்த குறும்பனார் “என் கண்ணுக்குக் கண்ணான குருவைப் பிரிந்து நான் எப்படி வாழ்வேன்?” என்று கூறி மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கு கரணங்களையும் ஒன்றுபடுத்தி தனது சிரசின் வழியாகத் தன் ஆன்மாவை வெளியேற்றி கபால மோட்சம் அடைந்தார். அன்று முதல் இவர் பெருமிழலைக் குறும்ப நாயனாராக அழைக்கப்பட்டார்.

குரு பக்தி கிடைப்பதற்கரிய சித்திகளைப் பெற உதவும் என்பதற்குப் பெருமிழலைக் குறும்ப நாயனார் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். குரு பக்தியை வளர்த்து அவர் வழி நடப்போமாக!

ஆதாரம் (References) :
shaivam.org
நாயன்மார் கதை (முதல் மற்றும் இரண்டாம் பாகம்), கி. வா. ஜகந்நாதன், மூன்றாம் பதிப்பு, அல்லயன்ஸ் பதிப்பகம்.

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0