காரைக்கால் அம்மையார்

தமிழகத்தில், காரைக்கால் என்ற ஊரில், வணிகர் தனதத்தருக்கு மகளாகப் பிறந்தவர் புனிதவதியார். இளம் வயதிலேயே சிவபெருமானிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவர். பரமதத்தன் என்ற வணிகரை மணமுடித்து, சிறப்பாக இல்வாழ்க்கை நடத்திவந்தார். இல்லம் தேடி வரும் சிவனடியார்களுக்கு இனிய முகத்துடன் உணவு படைப்பார்.

ஒருநாள் பரமதத்தன், தனக்கு அன்புப் பரிசாகக் கிடைத்த இரு மாங்கனிகளைக் கடையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைத்தான். புனிதவதியார், அன்று உணவருந்த வந்த ஒரு சிவனடியாருக்கு அந்த மாங்கனிகளில் ஒன்றைப் பரிமாறி உண்ணச் செய்தார். மதிய உணவிற்கு வந்த பரமதத்தன், இலையில் மாங்கனி இடுமாறு கேட்டான். அதை உண்டுவிட்டு, ருசியாக இருக்கிறது என்று மற்றொரு மாங்கனியும் கேட்டான். புனிதவதியார் செய்வதறியாது பூஜை அறை சென்று இறைவனிடம் மன்றாடினார். “கணவர் கேட்டு இல்லை என்று சொல்வது எப்படி?” என்று அழுதார். இறைவன் திருவருளால் அவர் கையில் ஒரு மாங்கனி வந்தது. அதனை உண்ட பரமதத்தன், “இதன் சுவை மிக அற்புதமாக இருக்கிறதே! இந்தக் கனி எப்படி கிடைத்தது?” என்று கேட்டான். புனிதவதி நடந்தவற்றையெல்லாம் விளக்கினார். “இறைவன், கனி கொடுப்பதாவது? அப்படி என்றால் இறைவனிடம் பிரார்த்தித்து இன்னுமொரு கனி பெற்று வா” என்று கூறினான். புனிதவதி மீண்டும் இறைவனிடம் சென்று வேண்டினாள். மீண்டும் ஒரு கனியைப் பெற்று அவனிடம் கொடுத்தாள். ஆனால், அந்தக் கனி அவன் கையிலிருந்து உடனே மறைந்து விட்டது.

மனைவி தெய்வ சக்தி வாய்ந்தவள் என்றும் வணங்குதற்கு உரியவள் என்றும் உணர்ந்து, அவளிடமிருந்து விலகி இருக்க ஆரம்பித்தான். பின்னர், கடல் கடந்து வணிகம் செய்யச் சென்று, நிறைய பொருள் திரட்டித் திரும்பிவந்து பாண்டி நாட்டில் ஒரு செல்வந்தரின் மகளைத் திருமணம் செய்து வாழ்ந்து வந்தான். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு, ‘புனிதவதி’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். தகவல் அறிந்த புனிதவதியின் உறவினர், அவளை பரமதத்தன் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

புனிதவதியைக் கண்ட பரமதத்தன், தன் குடும்பத்துடன் அவளடி பணிந்து வணங்கினான். “உம்முடைய அருளால் நாங்கள் இனிமையாக வாழ்கிறோம். எங்கள் குழந்தைக்கு உமது பெயரையே சூட்டினோம்” என்று கூறிவிட்டு அங்கிருந்தவர்களைப் பார்த்து, “இவர் சாதாரணப் பெண்மணி அல்ல. இவர் ஒரு தெய்வப்பிறவி. இவரை மனைவியாகக் கொண்டு வாழ்தல் அபச்சாரம். அதனால்தான் வீழ்ந்து வணங்கினேன். நீங்களும் இவரை வணங்குங்கள்” என்று கூறினான். பரமதத்தனின் கருத்தை உணர்ந்த புனிதவதியார், சிவபெருமானை நோக்கி, “இனி இந்த உடலால் பயனில்லை” என்று வேண்டிப் பேய் உரு கேட்டுப் பெற்றார்.

எலும்புருவம் பூண்ட அம்மையார், ‘அற்புதத் திருவந்தாதி’, ‘திருவிரட்டை மணிமாலை’ ஆகிய பதிகங்களைப் பாடினார். பின்னர் திருக்கயிலை நோக்கிப் புறப்பட்டார். வட நாட்டிற்குள் சென்றவுடன், காலால் நடப்பதைத் தவிர்த்து, தன் தலையால் நடக்கத் துவங்கினார். கயிலையை நெருங்கும் பொழுது, உமையம்மை சிவபெருமானிடம், ‘தலையால் நடந்து வரும் இந்த எலும்பு உருவத்தின் பக்தி தான் என்னே?’ என்று வியந்தார். சிவபெருமான், ‘அவள் நம் அம்மை’ என்று கூறினார். புனிதவதியார் அருகில் வந்ததும் ‘அம்மா’ என்றழைத்தார் ஈசன். புனிதவதியார் இறைவனை நோக்கி, “அப்பா” என்று கூவியபடியே அவரது திருவடிகளில் வீழ்ந்து பின் “என்றும் இறவாத அன்பும், மீண்டும் பிறவாத அருளும் வேண்டும். பிறந்தால் உன் திருவடி மறவாத வரமும் வேண்டும்” என்று கேட்டார். சிவபெருமான், “தென்னாட்டில், திருவாலங்காட்டில் நாம் ஊர்த்துவ தாண்டவம் செய்கின்றோம். அதைக் கண்டு, அங்கிருந்து நம்மைப் பாடுவாயாக” என்று கூறி அனுப்பினார். அதன்படி, திருவாலங்காடு வந்து, நிறைய பதிகங்கள் பாடி, அந்தத் தாண்டவ மூர்த்தியின் திருவடியின் கீழ் என்றும் உறையும் பேறு பெற்றார்.

ஆதாரம் (References) :
shaivam.org
நாயன்மார் கதை (முதல் மற்றும் இரண்டாம் பாகம்), கி. வா. ஜகந்நாதன், மூன்றாம் பதிப்பு, அல்லயன்ஸ் பதிப்பகம்.

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0