அனில் குமார்: சுவாமி! இப்போது நமது தேசத்தில் நாம் செய்யவேண்டியது என்ன?
பகவான்: இந்த தேசத்தை நீ காக்க வேண்டியதில்லை. சத்தியம், தர்மம் இரண்டையும் கடைப்பிடிக்க வேண்டும். இவ்விரண்டு தத்துவங்களையும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். அவை இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் காக்கும். இந்தப் பிரபஞ்சத்தை அதன் விரிவு மற்றும் வியாபகத்துடன் சேர்த்து நேசிக்கவேண்டும்.
எல்லோரையும் நேசி, எல்லோர்க்கும் சேவை செய். ஜாதி, மதம், தேசம் என்கிற குறுகிய எல்லைகளைத் தாண்டி நீ மேலெழ வேண்டும். மானுடத்தின் சகோதரத்துவம் மற்றும் தெய்வத்தின் தந்தைமையில் நீ நம்பிக்கை வைக்கவேண்டும். ஒருபோதும் காலத்தை வீணாக்கக் கூடாது. நீ பிறந்து, வளர்ந்து, சம்பாதித்து, பெயர் வாங்கிய சமுதாயத்துக்கு நீ நன்றி செலுத்த வேண்டும். தேசபக்தி கொண்டிரு. சமுதாயத்தில் ஒற்றுமை, இணக்கம், அமைதி, பாதுகாப்பு இவற்றை நீ கடைப்பிடிப்பதோடு, வளர்க்கவும் வேண்டும்.
மனிதப் பண்புகளை வளர்த்துக்கொண்டு உன்னுள் இருக்கும் தெய்வீகத்தை உணரவேண்டும். நேர்மையில்லாத வணிகம், மனிதத்துவமில்லாத அறிவியல், நன்னடத்தை இல்லாத கல்வி ஆகியவை பயனற்றவை என்பது மட்டுமல்லாமல் ஆபத்தானவையும்கூட. நீ ஒரு செம்மையான லட்சிய மனிதனாக இருக்கவேண்டும். நீ கடவுளிடமிருந்து வந்தவன். நீ ஒரு தெய்வீகப் பொறி. எனவே உனது குணங்களும் தெய்வீகமானவையாக இருக்க வேண்டுமே அல்லாது அரக்கத்தனமாக இருக்கக்கூடாது. “நான் மனிதன்” என்கிறாய். இது பாதியளவு உண்மையே. உன்னிடம் மிருககுணம் மனிதகுணம் இரண்டும் இருக்குமானால், உன் மனம் இரட்டையாக இருக்கிறதெனப் பொருள்படும். இரட்டை மனம் கொண்டவன் அரைக்குருடன்.
நீ ஆசைக்கு வரம்பு கட்டினால் மகிழ்ச்சியைப் பெறுவாய். எவனொருவன் அதிக ஆசைகளைக் கொண்டிருக்கிறானோ அவனே வறியவன். மனநிறைவு கொண்டவனே மிகப்பெரும் செல்வந்தன். பணத்தைவிடக் குணம் அதிக முக்கியமானது.
வாழ்க்கையின் நோக்கம் மற்றும் லட்சியத்தை நீ அறியவேண்டும். உண்ணவும், பருகவும், உறங்கவும் மட்டுமே அல்ல வாழ்க்கை. விலங்குகளும்கூட அதைச் செய்கின்றன. அப்படியானால் உன்னுடைய சிறப்புத்தன்மை என்ன? உனக்குள் இருக்கும் தெய்வீகத்தை அறிந்து, அனுபவித்து, உணர்வதற்கென இந்த வாழ்க்கையை இறைவன் உனக்கு அன்பளிப்பாகத் தந்துள்ளான். ஒழுக்கமும் நேர்மையும் மிகவும் முக்கியம். ஒழுக்கமே தேசத்தின் நடத்தைப் பண்பாக இருக்கவேண்டும். ஒரு தெலுங்குப் பாடல் கூறுகிறது:
ஒழுக்கமில்லாவிட்டால் நீ குரங்கினும் கீழானவன்
எந்த நாடு உண்மையில் மிகவுயர்ந்த ஒழுக்கத்தையும் தனித்துவத்தையும் காக்கிறதோ
அந்த நாடே நாடெனப்படத் தகுதி கொண்டது.
பின்வரும் மூன்று முக்கிய விஷயங்களை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்: முதலாவது: உலக நடப்பை நம்பாதே; சில சமயம் அது உன்னை மயக்கத்தில் ஆழ்த்தி, மனம் தடுமாற வைப்பதோடு, ஏமாற்றியும் விடும். இரண்டாவது: உன்னுடன், உனக்குள், உனக்கு மேலே, கீழே எப்போதும் இருக்கும் கடவுளை மறக்காதே. இல்லை, நீயேதான் கடவுள். மூன்றாவது: மரணத்துக்கு அஞ்சாதே, அது நிச்சயம் வந்தே தீரும். உண்மையில் மரணமே வாழ்க்கையின் மேலாடை. எண்ணம், சொல், செயல் இவற்றில் ஒருமைப்பாடு கொள்வதன்மூலம் வாழ்க்கையின் புனிதப் பாதையைக் கடைப்பிடி.
இன்னொன்றையும் நீ கவனிக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன். மனதைத் திற, வாயை மூடு. இன்றைக்கு மனிதர்கள் நினைப்பதொன்று சொல்வதொன்றாக இருக்கிறது. அவர்கள் உள்ளங்களில் பொறாமை, கர்வம் இன்னும் என்னென்னவோ நிரம்பி இருக்கின்றன. நீ உன் உள்ளத்தைத் திறந்து, அதை மாசுபடுத்தும் அனைத்தையும் நீக்கவேண்டும், வாயை மூடிவைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உன் வாழ்க்கையைச் சேவைக்கு அர்ப்பணித்துவிடு. உனது இறுதி இலக்காகவும் நோக்கமாகவும் கடவுளே இருக்கட்டும். “சமுதாயத்தில் கரங்கள், காட்டில் மனம்” என்று நான் சொல்வதன் பொருள் இதுவே.
நீ உனது அரிய அறிவையும் மதிப்புமிக்க அனுபவத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். நீ சாயியின் அருட்செய்தியைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். முதலில் உன்னில் நம்பிக்கை கொள், பிறகு கடவுளை நம்பலாம். இன்றைய பிரச்சனைகளின் உண்மையான காரணம் எதுவென்றால், உன்னிடமே உனக்கு நம்பிக்கை இல்லாததுதான். உனக்குத் தன்னம்பிக்கை இல்லை.
கிராம சேவையே ராமசேவை என்று கருது. ஊர்ப்புறச் சேவை கடவுளின் சேவை. சுகாதாரம், உடல்நலம், தூய்மை குறித்துக் கிராமத்தினருக்கு விளக்கிச் சொல். மருத்துவ முகாம்கள் நடத்து. எல்லோருக்கும் தண்ணீர், குறிப்பாகக் குடிநீர், வழங்க ஏற்பாடு செய். புகைபிடித்தல், மதுப்பழக்கம் ஆகியவற்றின் தீமைகளை விளக்கிச் சொல். இந்தக் கெட்ட பழக்கங்களை விட்டுத்தள்ள அவர்களுக்கு உதவு.
உள்ளூர் மக்களுடன் நெருங்கிப் பழகி அவர்களுடன் பணி செய்தால், தக்க காலத்தில் அவர்கள் தனியாகவே பணிகளை செய்துகொள்ளவும் தற்சார்பு கொள்ளவும் சக்தி பெறுவார்கள். மானவ சேவையே மாதவ சேவை. தியானம், தவம், வழிபாடு, ஜபம் ஆகியவற்றைவிடச் சேவை மிகப்பெரிய உயர்ந்த ஆன்மீக சாதனையாகும். வறியோர்க்கு, தேவை உள்ளவர்க்குச் சேவை செய்.
தன்னலமாக இராதே. பொறாமை, கர்வம், பற்று இவற்றுக்கு இடம் கொடாதே. பக்தி, சத்தியம், கட்டுப்பாடு, பரந்த மனப்பான்மை முதலிய பண்புகளை வளர்த்துக்கொள். ஆடம்பரம், கர்வம், அகங்காரம் ஆகியவற்றை அனுமதிக்காதே. தீய குணங்கள் புலிகளைப் போன்றவை, ஆனால் நற்குணங்கள் பசுக்களைப் போன்றவை. புலிகள் எங்கேனும் பசுக்களை வாழவிடுமா? விடாது. ஆகவே உன் இதயத்தில் தீய குணங்களை வைத்திருக்காதே. உயர் மனிதப் பண்புகளை மேலும் மேலும் உன்னில் வளர்த்துக்கொள். உனது லட்சியங்களுக்கேற்ப வாழ்க்கை நடத்து.
ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு
Help Desk Number: