அனில் குமார்: சுவாமி, ரிஷிகளுக்கிடையில் வால்மீகி எவ்வாறு குறிப்பிடத் தகுந்தவர்?
பகவான்: ராமாவதாரம் நிகழ்ந்த காலத்திலேயே ராமாயணம் எழுதவும் இசைக்கவும் பட்டது. மிகப்பெரிய ரிஷியும் தபஸ்வியுமான வால்மீகி ராமரின் சமகாலத்தவர் என்பதோடு, ராமாயணத்தை எழுதிய அவரே ஆதிகவியும் (முதல் கவிஞர்) ஆவார். ஒழுக்கத்துக்கும் கற்புக்கும் பெரும்புகழ் பெற்ற சீதாதேவிக்கு அவர் புகலிடம் அளித்தார், அவளது குழந்தைகளான லவ, குசர்களை வளர்த்தார்; அவர்களுக்கு வில்வித்தையும் கலைகள் அனைத்தையும் புகட்டினார். அவ்வாறாக அவர் ராமாயணத்தில் ஒரு முக்கியப் பங்கை வகித்தார்.
ராமாயணத்தை எழுதிய பின்னர், அந்த மகா காவியத்தை எப்படிப் பரப்பலாம் என ஆழ்ந்து யோசித்தார். அந்தக் கட்டத்தில், லவனும் குசனும் முன்வந்து, வால்மீகி மற்றும் பிற ரிஷிகளின் முன்னிலையில் ஒரு சபதம் எடுத்துக்கொண்டனர்: “நாங்களே ராமாயணத்தைப் பாடி, அந்த அமுதத்தை உலகத்தவர்க்கு எடுத்துச் செல்கிறோம்” என்பதே அந்தச் சபதம்.
இவ்வாறு, ராமபிரானின் காலத்தில் வாழ்ந்து, தெய்வீகமான ராமாயணத்தைப் புனைந்ததுடன் அதனை ராமரின் சன்னிதியில் இசைக்கவும் பெறுவதான தன்னிகரில்லாப் பெருமையை வால்மீகி அடைந்தார். உலக ரட்சகரும், தனது கவிதையின் நாயகனுமான ராமபிரானின் லட்சியங்கள் மற்றும் தெய்வீகத்தை உலகம் முழுவதும் அறியச் செய்தவர் வால்மீகியே. இவ்வாறு திரேதா யுகத்திலிருந்தே மானுடத்திலிருந்த தெய்வீகம் ஒளிவீசத் தொடங்கியது.
மனிதனின் தர்மத்தை மனித குலத்துக்கு உணர்த்துவதே ராமாவதாரத்தின் நோக்கம். இன்றைக்கு அதேதான் நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் கவனித்திருக்கலாம், இன்றைய அவதாரத்திலும், சமகாலத்தவர்களே வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறார்கள், தெய்வீகத்தை ஏற்கிறார்கள், வழிபடுகிறார்கள், அனுபவிக்கிறார்கள், உலகெங்கிலும் கொண்டாடுகிறார்கள். இவையனைத்தும் இந்த அவதாரத்தின் காலத்திலேயே நடக்கின்றன என்பது ராமாவதாரத்துடன் ஒப்புமை உடையதாகும். அதே லட்சியம்! அதே பிரேமை! சத்யம், தர்மம் ஆகியவற்றைக் கடைப்பிடிக்கச் சொல்லும் அதே செய்தி!
ஆதாரம்: ‘சத்யோபநிஷத்’, பேராசிரியர் அனில் குமார் காமராஜு
Help Desk Number: