ஆதி சங்கரரின் பித்ரு பக்தி
“மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ”, எனும் வேத வாக்கியத்தின் உண்மையான பொருளை அறிந்தவர் சங்கரர். ஒரு முறை தந்தையார் வீட்டை விட்டு வெளியேறும் போது, “அருமை மகனே! நான் தினமும் ஆலயத்திற்குச் சென்றுவழிபாடு செய்து அனைவருக்கும் பிரசாதம் அளிக்கிறேன். அதைப் போலவே, நானும் உனது அம்மாவும் இல்லாத சமயம் நீ இதைத் தயவு செய்து செய்ய வேண்டும்” என்று கூறினார். அவர் கூறிய கடமையைத் தவறாமல் செய்வதாக சங்கரர் உறுதி கூறினார்.
ஒரு கோப்பையில் சிறிது பாலை ஊற்றினார். தேவியின் சிலை முன் வைத்தார். ”தாயே நான் அளிக்கும் இந்தப் பாலைப் பருகுங்கள்”, என்று வேண்டினார்.
நெடு நேரம் அவர் வழிப்பட்ட பின்பும் தேவி பாலைப்பருகவோ தோன்றவோ இல்லை, சங்கரர் பெறிதும் ஏமாற்றமடைந்தார். எனவே மீண்டும், “அம்மா தாயே! எனது தந்தையார் அளித்த நைவேத்யத்தை நீங்கள் தினமும் ஏற்றுக்கொள்கிறீர்கள், ஆனால் நான் அளிக்கும் நைவேதயத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. எனது கைகள் என்ன பாவம் செய்தன?” என்று கூறினார். தனது இதயத்தின் அடிமட்டத்திலிருந்து அவர்மனமொன்றி தேவியை வேண்டினார். இறக்கவும் தயாராகிவிட்ட அவர் தனக்குள், “எனது தந்தையார் தேவிக்குப் பால் அளிக்கும்படிக் கூறினார். ஆனால் தேவியோ எனது நைவேத்யத்தை ஏற்றுக்கொள்ளாததால் நான் அதைத் தொடர்ந்து செய்ய இயலாதவனாய் இருக்கிறேன். இப்படி இருப்பதைவிட இறப்பதே மேல்” என்று கூறினார். வெளியே சென்று தன்னைக் கொல்வ தற்கு ஒரு பெரிய கல்லை எடுத்து வந்தார். 
சங்கரரின் ஈடுபாடு கருணை மிகு ஜெகன்மாதாவின் மனதை மிகவும் இளக வைத்தது. உடனே அவர்முன் தோன்றி, அவர் அளித்த பாலைப் பருகினார். கோப்பையில் இருந்த பால் முழுவதையும் பருகி விட்டு காலி கோப்பையை அவர்முன் வைத்தார். ஜெகன்மாதா தன்முன் தோன்றி பால் முழுவதையும் பருகியதால் சங்கரர் மனம் மகிழ்ந்தார். ஆனால் மற்றவர்களுக்குக் கொடுப்பதற்குக் கோப்பையில் கொஞ்சம் கூட பால் இல்லை. திரும்பி வந்தவுடன் தந்தை கண்டிப்பாகக் கடவுள் பிரசாதத்தைக் கேட்பார். நைவேத்யப் பால் முழுவதையும் நானே பருகிவிட்டேன் எனக் கருதி அவர் என் மீது கோபப்படலாம் என பயந்தார். எனவே, “தேவி தயவு செய்து ஒரு சொட்டு பாலாவது அருளுங்கள்; அதை அப்பாவுக்குக் கொடுத்து விடுகிறேன்” என்று வேண்டினார். ஆனால் தேவி தோன்றவில்லை;
இருப்பினும் தொடர்ந்து ஈடுபாட்டுடன் வேண்டினார். ஆனால் தேவியின் மனம் இளகி மீண்டும் காட்சி கொடுத்தார். ஏற்கனவே பருகிய பாலைத் திருப்பித் தர முடியாததால் தன் பாலையே கோப்பையில் நிரப்பினார். தேவியின் தெய்வீகப் பாலை சங்கரர் பருகிய காரணத்தால்தான் அவர் சிறந்த கல்வி கேள்வியும், கிடைத்தற்கரிய விவேகமும் பெற்றுத் திகழ்ந்ததாக ஓர் ஐதீகம் நிலவுகிறது.
தேவியின் கருணை சங்கரரின் அறிவாகப் பிரகாசித்தது என்பதே இதன் சாரம். தந்தையை மகிழ்விக்கும் பொருட்டு அவர் கடுமையாக முயன்றார்; இதன் மூலம் ஜெகன் மாதாவே தன்முன் தோன்றும் பேறும் பெற்றார். நமது தந்தையரின் ஆணைகளை உள்ளன்புடனும், ஈடுபாட்டுடனும் நாம் மதித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இக்கதை நமக்குப் போதிக்கும் பாடம்
Help Desk Number: