மாயக் கம்பளமும் கரடியும்

ஆத்மதத்துவம் பிரிக்க முடியாத ஒன்றாகும். ஆற்றங்கரை ஒன்றில் குழந்தைகள் தங்கள் பசுக்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர். 

அது மழைக்காலமாதலால், ஆற்றில் திடீரென வெள்ளம் வந்து விட்டது. சீறிவந்த வெள்ளத்தின் நடுவில் கரடி ஒன்று நழுவி விழுந்து போய்க்கொண்டிருந்தது. 

சிறுவர்களில்   ஒருவன் மிதந்து வந்த  மூட்டையைக் கவனித்து விட்டான். தூரத்தில் இருந்து பார்த்தபோது கம்பள மூட்டை ஒன்று நீரில் மிதந்து வருவது போல அவனுக்குத் தோன்றியது. அவன் தன் நண்பர்களிடம், “நான் ஆற்றில் குதித்து அந்தக் கம்பளமூட்டையைக் கொண்டுவரப் போகிறேன்” என்று கூறிவிட்டு ஆற்றில் குதித்துவிட்டான். 

தவறாகக் கம்பள மூட்டை என்று எடை போட்ட அவன், தன் கைகளால் அந்தக் கரடியைக் கட்டித் தழுவினான். அதன்பின் அந்தக் கரடியும் அவனைத் தழுவிக் கொண்டது. அதனிடமிருந்து விடுபடுவதற்கு அவன் எத்தனை முயன்ற போதும் கரடி அவனை விடாமல் இருகத்தழுவிக் கொண்டது. கரையில் இருந்த சிறுவர்கள், “அருமை நண்பனே! அந்த மூட்டையை விட்டுவிட்டு வெளியே வா” என்று கூச்சலிட்டனர். நீரில் போராடிக்கொண்டிருந்த பையன்:- “நான் தப்பிக்க முயன்றாலும் அது என்னை விட மாட்டேன் என்கிறது” என்று கதறினான்.

அதைப் போலவே வாழ்க்கை எனும் இந்த ஆற்றிலும் மாயை எனும் கரடி வருகிறது; நாம் அதைக் கம்பள மூட்டை எனக்கருதுகிறோம். அது நமக்கு ஆறுதலும், வசதியும், சுகமும் நல்கும் எனக்கருதி ஆற்றில் குதித்து அதைப்பிடிக்க முயல்கிறோம். சிலகாலம் கழித்து அதிலிருந்து விடுபட விரும்புகிறோம்; ஆனால் விடுபட முடிவதே இல்லை. பொய்த்தோற்றம் அனைத்தும் மாயையால் உருவானவை. ஆனால் தெய்வீக உண்மையோ என்றும் மாறாத ஒன்று. தோற்றங்கள் பலவாய் இருப்பினும், இருக்கும் இறைவன் ஒருவனே என்றும் வேறுபட்ட  உருவங்கள்  பல இருப்பினும், அந்த வேற்றுமையில் மாறாத ஒன்றாக ஊடுருவிநிற்பவன் இறைவனே என்றும் விஷிச்டாத்வைதம் ஆதிமுதல் போதித்து வருகிறது.

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0