தெனாலிராமனின் தனேஷபாரதம்.
புனிதமான பாண்டவர்களின் கதையை லௌகீகக் காரியக்துக்குப் பயன்படுத்தும் எண்ணத்துடன் டெல்லி தனேஷா தனது அரசவைக்கு, விஜயநகரத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர்கள் எட்டு பேரை வரும்படி அழைத்தான். மஹாபாரதத்தின் சிறப்பை விளக்கிக் கூறும்படி மன்னன் புலவர்களைக் கேட்டான். அவரது கட்டளைக்கேற்ப அழகாக, கவர்ச்சியாக கதை கூறப்பட்டது.
கதையைக் கேட்டு முடித்தவுடனே தனேஷா தன்னை தர்மராகவும், தனது சக மந்திரிகளைத் தம்பிகளாகவும், பகைவர்களைக் கௌரவர்களாகவும் சித்தரித்து தனேஷபாரதம் என்ற பெயரில் புதிய காவியம் ஒன்றை எழுதும்படிக் கூறினான். கவிஞர்களுக்கு அப்படி எழுதுவதற்கு விருப்பமில்லையாதலால், அரசனை எப்படிச் சமாளிப்பது எனத் தங்களுக்குள் கலந்து பேசினர். அப்போது கவிஞர் குழாமிலிருந்த புத்திசாலியான தெனாலிராமன், புத்தகம் எழுதும் வேலையைத் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறினான். தனேஷாவுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டுமென அவன் விரும்பினான்.
தனேஷகாவியம் ஒரு வாரத்திற்குள் தயாராகிவிடவேண்டுமென்று கூறினான் மன்னன். ஒரு வாரம் முடியப்போகிறது; ஆனால் தெனாலிராமன் இன்னும் எழுதவே ஆரம்பிக்கவில்லை; எனவே மன்னன் தண்டித்துவிடுவான் என மற்றப் புலவர்கள் பயந்தனர். ஒருவாரக் காலக்கெடுவும் முடிந்து விட்டது. தெனாலிராமன் சில தாள்களை எடுத்துக்கொண்டுச் சென்றான்; தனேஷா காவியத்தைக் கேட்க பல நண்பர்களை அழைத்திருந்தான். பரதன் பாத்திரம் முடிந்து விட்டதா? என்று தனேஷா தெனாலியிடம் கேட்டான்; முடிந்து விட்டதாகவும் ஒருசில ஐயங்களை மன்னனிடம் கேட்டுத் தெளிவுபடுத்த வேண்டியிருப்பதாகவும் கூறினான்.
“அப்படியானால் நான் தெளிவுபடுத்த வேண்டிய அந்த ஐயங்களைக் கூறுவாயாக” என்று தனேஷா கேட்டான். அதற்கு:- “பொது இடத்தில் அதைக் கூறுவதற்குத் தயக்கமாக இருக்கிறது. நாம் இருவரும் தனியாக அமர்ந்து பேச வேண்டிய விஷயம் அது” என்றான் தெனாலி.
இருவரும் உள்ளே சென்றனர்; அங்கே “திரெளபதி வேடத்துக்குப் பொருத்தமானவர் யார்” எனக் கேட்டான் தெனாலி. திரௌபதி பாண்டவர்கள் ஐவருக்கும் மனைவியாதலால் இந்த கதாபாத்திரத்தை ஏற்பவர் ஐவருக்கு மனைவியாக இருக்கச் சம்மதிக்க வேண்டும். தனேஷாவின் மனைவி மற்றவர்களுக்கும் மனைவியாக இருக்கவேண்டும் என்பது இதன் பொருள். தெனாலி தனேஷாவைப் பார்த்து:- தங்கள் மனைவி இந்த வேடத்தில் நடிக்க சம்மதமா” என்று கேட்டான்.
அந்த யோசனை தனேஷாவிற்குச் சிறிதும் பிடிக்கவில்லை. எனவே அவர்களுக்குரிய சன்மானங்களைக் கொடுத்து அப்படிப்பட்ட பாரதம் அங்குத் தேவையில்லை என்றும் புலவர்களை அந்த இடத்தை விட்டுப் புறப்படும்படியும் தெனாலிராமனிடம் கூறினான். இப்படியாகப் பாண்டவர்களுக்குரிய புகழ் மட்டும் தனக்கு வேண்டும். ஆனால் பாண்டவர்கள் திரெளபதியை மனைவியாக ஏற்குமுன் கூறிய புனித (வாக்குறுதிகள்) ஒப்பந்தங்கள் வேண்டாம் எனும் தனேஷாவின் அறிவீனத்தை இங்கே நாம் பார்க்கிறோம். இன்று நாம் நமது பண்பாட்டின் மேம்பாட்டை நிலைநிறுத்த வேண்டுமெனில் சீலமும்(ஒழுக்கம்) சத்தியமும் பண்பாட்டின் அடித்தளம் என்பதை நாம் உளமாற உணர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். நாமும் சத்தியப்பாதையில், நீதியின் பாதையில் செல்லவேண்டும். புகழ்மட்டும் வேண்டும், முன்னோர்கள்சென்ற நெறிவேண்டாமென்றால் நாமும் தனேஷா செய்ததையே செய்தவர்களாகிறோம். அது (போலி) செயற்கையான வாழ்வு நடத்துவதாகவே இருக்கும், குறுக்கு வழியில் சுலபமாகப் பெயர் புகழ் எடுக்க நாம் முயலக்கூடாது. வாழ்க்கையின் குறிக்கோளை அடையவே (நிறைவு செய்யவே) நாம் பாடுபடவேண்டும்.