கோபியரின் பக்தி
இதயப்பூர்வமாகப் பக்தி செலுத்துவதில் சிறந்தவர்கள் கோபியர்கள். உதாரணத்துக்கு நீரஜா என்ற பெண்மணியின் பக்தியைப் பார்ப்போம். நிச்சயதார்த்தம் அந்தப் பெண்ணுக்கு முடிந்திருந்தது; அந்நிலையில் கண்ணனைக் காண கிராமத்திலிருந்து வெகு தொலைவிலுள்ள பிருந்தாவனத்துக்குப் போகக்கூடாது என்று அவள் எச்சரிக்கப்பட்டிருந்தாள்.
இருப்பினும் அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் அவள் கோவர்த்தன விழாவில் கலந்து கொள்ள பிருந்தாவனத்துக்குச் சென்று விட்டாள். அங்கே கண்ணனைக் கண்டவுடன் தன் இதயத்தை அந்தப் பிரபுவிடம் பறி கொடுத்துவிட்டாள். அவளுடைய தீவிர ஆன்மீக நாட்டம் காரணமாகக் கடுமையான சோதனைகளை அவள் சந்தித்தாள்.
இருப்பினும் அவற்றை அவள் பொறுமையுடன் சகித்துக் கொண்டாள். அவள் முதல் முறையாகக் கண்ணனைக் கண்ட போது கோவர்த்தனமலையின் அடிவாரத்தில் கண்ணன் இனிமையாகக் குழல் ஊதிக் கொண்டிருந்தார்.
அன்று முதல் தன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கள்வனைக் கண்டு தூய தெய்வீகக் காற்றைச் சுவாசிக்கும் பொருட்டு அங்கே அடிக்கடிச் சென்று வருவாள்.
பிருந்தாவனத்திலிருந்து மதுராவுக்குக் கண்ணனை அழைத்துச் செல்ல அக்ரூரரின் தேர் தயாராக இருந்தது. அந்தத் தேர் குதிரைகள் புறப்படாதபடி கோபியர் தடுத்து நிறுத்த முயன்றபோது நீரஜா முதல் ஆளாக உதவினாள்.
கண்ணனின் பிரிவைத் தாள முடியாமல் அவள் பல ஆண்டுகளாக மானசீகமாகத் துயருற்றாள். இனி இந்தப் பிரிவுத் துயரைத் தாங்கவே முடியாது எனும் நிலையை அவன் அடைந்தபோது அந்த மாயக் கண்ணன் அவள் முன் தோன்றினார். கண்ணன் மடியில் அவள் உயிர் துறக்கும் முன் தெய்வீகக் குழலின் கானத்தைக் கேட்க விரும்புவதாகக் கண்ணனிடம் பணிவுடன் வேண்டினாள்.
“நான் குழலைக் கொண்டு வரவில்லையே” என்றார் பிரபு. இருப்பினும் அருகிலிருந்த நாணலை ஒடித்து ஒரு நொடியில் குழல் செய்து, வாசித்துக் காட்டினார்; நீரஜாவின் இதயம் உருகிக் கண்களில் நீர் வழிந்தது; அந்தக் கண்ணீர் அவளது துயரைத் துடைத்து ஆன்மாவுக்கு விடுதலை அளித்தது.