‘ஐந்தில்’ அணிவித்து
- இலவங்கம், ஏலம், சாதிக்காய், கற்பூரம், தக்கோலம்,
- பஞ்சவாச மாலை சாற்றி பரப்பிரும்மனுனக்குச்
- சூட்டியழகு பார்க்கக் கண்கள் கோடி வேண்டும்
- சர்க்கரை, தேன், தயிர், பால், நெய், பஞ்சாமிர்தம்
- சத்திய தெய்வமுனக்கு அபிஷேகிக்க நித்திய
- ஆனந்தம் கோடி கோடியாய்க் கூடித்தான் வரும்
- முல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம், பஞ்ச பாணப்
- பூமாலை சூட்டிப் பரசிவனுனைப் பார்த்தால்
- கோடி இன்பச் சுகம் கிட்டும்
- பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன்
- என உன் பஞ்ச அவதாரக் கோலங்காணப்
- பஞ்சமின்றிப் பசியாற்றி கோடி கோடி
- நாராயண சேவை யளிக்கலாம்
- காசி, சோமநாத், பூரி, ராமேஸ்வரம், வைத்தியநாத்
- பஞ்சயாத்திரை சென்றுன் கோடி கோடி
- பக்தர்களுன்னருளில் அகமகிழ்ந்தருள் பெறுவர்
- நீர்,நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்,
- பஞ்ச பூதங்களும் உன் வசம்
- நீ அதில் ஆட்சிதான் செய்கிறாய்
- கோடிக்கணக்கான நட்சத்திரக் கூட்டங்களில்
- எக்கோடியிலும் காட்சி தந்து நீ மாட்சி செய்கிறாய்
- சங்கு, சக்கரம், கதை, கத்தி, வில், உன்
- அவதாரபஞ்ச ஆயுதங்கள்
- சத்யம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சை, உன்
- அன்புக்கருணையின் அடையாளங்கள்
- வெண்மை, கருமை, செம்மை, பொன்மை,
- பசுமை, பஞ்சவர்ணங்கள்
- அன்பு, மனம், மதம், இனம், மொழிதான், உன் பக்தர்களின்
- எண்ணங்கள் தருணங்கள் சந்தோஷங்கள்
- உன் தரிசனம், ஸ்பரிசனம், சம்பாஷனம்,
- கரிசனம், அபயஹஸ்தம், பாத நமஸ்காரம்,
- தருமே பக்தர்களெங்களுக்கு, அதுவே
- ஆத்ம நிவேதனம், ஆனந்தசாகரம்
- அனந்த கோடி நமஸ்காரங்கள் சுவாமி சரணம் போற்றியே.
– தமிழரசி பாலசுப்பிரமணியம்