திருநாளைப் போவார் நாயனார்
மயிலாடுதுறைக்குக் கிழக்கே அமைந்துள்ள மேலாதனூரில் அவதரித்து, பறையடிக்கும் தொழில் செய்து வந்தார் நந்தனார். இவர் நினைவு தெரிந்த நாள் முதல் சிவ பெருமானிடம் இணையில்லா அன்புடையவராக இருந்தார். பரமனின் பதம் தவிர வேறு நினைவின்றி வாழ்ந்து வந்தார்.
அவரது பரம்பரை நிலத்தில் விவசாயம் செய்து, ஜீவனம் செய்து வந்தார். தான் செய்யும் தொழிலை செவ்வனே செய்து, அறநெறி பிறழாமல் வாழ்ந்து வந்தார். தொழில் முறையில் வல்லவராகிய நந்தனார், தம் அனைத்து செயல்களிலும், சிவ பெருமான் திருத்தொண்டையே செய்து வந்தார். அக்கால சமுதாயக் கட்டுப்பாடு, அவரைக் கோயிலினுள் நுழைய அனுமதிக்கவில்லை. அதற்காக அவர் வருந்தியதும் இல்லை. நந்தனார் சிவபெருமானுடைய கோயில்களில் உள்ள பேரிகை முதலிய தோல் கருவிகளுக்கான தோலையும், கோயிலில் இசைத் தொண்டு புரிபவர்களுடைய வீணைக்கும் யாழுக்கும் வேண்டிய நரம்புகளையும், கோயில் ஆராதனைக்குக் கோரோசனையையும் (இறந்த பசுவின் வயிற்றிலிருந்து எடுக்கப்படும் வாசனைப் பொருள்) கொடுப்பார். கோயிலுனுள் சென்று தொண்டு புரியும் நிலையைப் பெறாமல் இருந்தும், நந்தனார் தம் தொழிலுக்கு ஏற்ற வகையில் அக்கோயில்களுக்குப் பயன்பட்டார். மனமிருந்தால் மார்க்கமுண்டு!
இவ்வாறு நரம்பு, வார், தோல் ஆகியவற்றைக் கொடுப்பதற்காக, நந்தனார் ஒவ்வொரு நாளும் கோயில்களை நோக்கிச் செல்வார். கோயில் வாயிலில் நின்று, தாம் கொணர்ந்த பொருட்களைக் கொடுத்துவிட்டு, அங்கு நின்றபடியே கோயிலைப் பார்த்துக் குதித்துக் கூத்தாடி, ஆடிப் பாடி மகிழ்வார். கோயிலையும், கோபுரத்தையும் தரிசிக்கும் இன்பத்தை தம்முடைய தொழிலோடு பிணைத்துக் கொண்டார்.
ஒருமுறை சிவபக்தியோடு திருப்புன்கூர் ஆலயத்துக்குச் சென்று திருப்பணி செய்ய ஆவலுடன் புறப்பட்டுச் சென்றார். கோயிலின் வெளியே நின்று வணங்குகையில், இறைவனைக் காண முடியாமல் நந்தி மறைக்கிறதே என்று வருந்த, ஈசனும் நந்தியை விலகச் செய்து அருளினார். நந்தனார் வாயிற்படியில் நின்றவாறே எம்பெருமானை தரிசித்து ஆனந்தக் கூத்தாடினார். பிறகு, கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்காக, அங்கே ஒரு குளம் வெட்டினார்.
இறைவனின் அபிஷேகத்திற்கு ஒரு குடம் நீர் கொடுக்க முடியவில்லையே என்று நினைந்ததில்லை. ஆனால், பல குளம் வெட்டிப் பல குடம் நீர் கொடுத்தார். அதில் எத்தனைத் தொண்டர்கள் நீராடினார்கள்! எத்தனையோ குட நீர் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்பட்டன. இந்த உண்மையை உணர்ந்துத் தொண்டு புரிந்தார்.
இவ்வாறு பல தலங்களுக்குச் சென்று, தொண்டு புரிந்து வந்த நந்தனாருக்குத் தில்லை சிதம்பர நடராஜரைத் தரிசிக்க ஆவல் தோன்றியது. ஆனால் அது பெரிய கோயில், வெளியில் இருந்து தரிசிக்க முடியாது என நினைந்து வருந்தினார். அனாலும் ‘நாளைப் போவேன்’ என்று துணிவார். ஆனால் பொழுது புலர்ந்ததும், அக்கால கட்டுப்பாட்டினை நினைந்து புறப்படாமல் நின்று விடுவார். மறுபடியும் அவரது உள்ளம் உந்த, ‘நாளைக்குப் போகலாம்’ என்று ஆறுதல் அடைவார். இவ்வாறு இவர் சிதம்பர நடராஜரைத் தரிசிக்கத் தில்லைக்கு நாளைப் போவேன் என்று பல நாள் கூறி வந்ததால், அவரை மக்கள், “திருநாளைப் போவார்” என்றழைத்தனர்.
கடைசியில் ஒருநாள் அப்பெருமானிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர் அழைத்தால் தடுப்பார் யார்? நந்தனாரும் தில்லை சென்றார். அங்கே அவருக்கு வியத்தகு முறையில் நடராஜரின் தரிசனம் கிடைத்தது.
தில்லையில், அப்பெரிய கோயிலின் வாயிலில் நின்று இறைவனை தரிசிக்க இயலாமல் போகவே கோயில் மதிற் சுவற்றைச் சுற்றி சுற்றி வந்த நந்தனார், பின் அசதியில் அங்கு தரையிலேயே படுத்து உறங்கிவிட்டார். அப்பொழுது ஈசன் கனவில் தோன்றி இப்பிறவி ஒழிய அவரைத் தீயினில் மூழ்கி தில்லைவாழ் அந்தணர்களுடன் தன்னை தரிசிக்க வருமாறு கூறினார். அதே சமயம் அந்தணர்கள் கனவிலும் ஈசன் தோன்றி, கோயிலின் பின்புறம் உறங்கும் தன் பக்தனை நெருப்பில் குளிப்பாட்டி தன் சந்நிதிக்கு அழைத்து வருமாறு ஆணையிட்டான். அந்தணர்களும் எம்பெருமானின் ஆணையின் படி நந்தனார் இருந்த தில்லையின் புறத்தே சென்று தீ அமைத்துக் கொடுக்க, அதை ஏற்று பயமின்றி பக்தியுடன் தீயினுள் இறங்கிய நந்தனார் மீண்டும் புண்ணிய முனிவராக எழுந்தார். அந்தணர்களுடன் கோயிலினுள் சென்று நடராஜரை தரிசித்தார். சற்று நேரத்தில் அவரைக் காணாமல் அந்தணர் அதிசயித்தனர். நந்தனார் இறைவனிடம் ஐக்கியமானதை அறிந்தனர்.
அக வாழ்க்கையில் முனிவராக உயர்ந்து நின்றவருக்குத் தடையாக நின்ற புறவாழ்க்கையை இறைவன் மாற்றிவிட்டான். அவரைத் தன் திருவடி மலரில் வண்டாகச் சேர்த்தார்.
தூய இதயம், அப்பழுக்கற்ற பக்தி மற்றும் உண்மையான அர்ப்பணிப்பு ஒருவனுக்கு இருந்தால், இறைவன் சமுதாயத் சவால்களைத் தகர்த்து, அந்த பக்தனை நிச்சயம் ஆட்கொள்வார் என்ற உண்மையை உணர்த்தும் ஒரு சத்திய வாக்கு தான் இந்த நந்தனார் சரித்திரம்.
ஆதாரம் (References) :
shaivam.org
நாயன்மார் கதை (முதல் மற்றும் இரண்டாம் பாகம்), கி. வா. ஜகந்நாதன், மூன்றாம் பதிப்பு, அல்லயன்ஸ் பதிப்பகம்.