திருநீலநக்க நாயனார்
தமிழகத்தில், சன்னாநல்லூரிலிருந்து நாகூர் செல்லும் வழியில் அமைந்துள்ள சாத்தமங்கை என்னும் ஊரில் அவதரித்த நீலநக்கர், வேதங்களைக் கற்றுத் தேர்ந்தவர். மறையொழுக்கம் வழுவாத இவர், ஒரு சிறந்த சிவபக்தர். ஆகமவிதிப்படி சிவனுக்குப் பூஜை செய்வதும், சிவனடியார்களுக்கு அமுது படைப்பதுமே வேதம் விதித்த தலைமைச் செயல் என்று எண்ணிக் கடைபிடித்தவர்.
அவ்வூரில் இருந்த சிவபெருமானுக்கு அயவந்தி என்று பெயர். ஒரு திருவாதிரை நன்னாளில், அயவந்தீஸ்வரருக்குப் பூஜை செய்ய, நீலநக்கர் தம் மனைவியுடன் கோவிலுக்குச் சென்றார். கணவர் செய்யும் பூஜைக்கு மனைவியார் பேரன்புடன் உதவி செய்துகொண்டிருந்தார். விரிவான பூஜை முடித்து, பஞ்சாக்ஷர ஜபம் செய்யத் துவங்கினார் நீலநக்கர். அப்பொழுது சிவலிங்கத்தின் மேல் ஒரு சிலந்தி வந்து விழுந்தது. குழந்தை மேல் சிலந்தி விழுந்தால், அந்த இடத்தை ஊதி, எச்சில் உமிழ்ந்துத் துடைப்பது, தாய்மார்களின் வழக்கம். நீலநக்கரின் மனைவியாரும் தாயன்புடன், சிலந்தி விழுந்த இடத்தை ஊதி, உமிழ்ந்தாள். அதைக்கண்ட நீலநக்கர் கோபமடைந்தார். அவளுடைய அன்பின் திறத்தை அறியாத நீலநக்கர் “ஆசாரத்தோடு பூஜை செய்யும் போது எம்பெருமான் மேல் எச்சிலைத் துப்பினாயே! இனி நான் உன்னோடு வாழ மாட்டேன். இப்போதே உன்னைத் துறந்தேன்” என்று கூறி, அவளை அங்கேயே விட்டு விட்டு, வீடு திரும்பினார். கணவன் கூறியதைக் கேட்டு மனம் வருந்திய அந்தப் பெண்மணி, அன்று இரவு சிவாலயத்திலேயே தங்கி விட்டாள்.
அன்றிரவு, அயவந்தீஸ்வரர் நீலநக்கர் கனவில் தோன்றி, “என் திருமேனியைப் பார்! உன் மனைவி அன்பினால் ஊதிய இடம் தவிர மற்ற இடங்களில் எல்லாம் கொப்புளங்கள் நிறைந்திருக்கின்றன” என்றார். சிவபெருமானின் திருமேனி கண்ட நீலநக்கர், கண் விழித்து எழுந்து, ஆடினார், பாடினார், துடித்தார், அழுதார். விடிந்தவுடன் கோயிலுக்கு விரைந்தார். இறைவனைத் தரிசித்து விட்டு மனைவியைக் கண்டு, அவளை அழைத்துக் கொண்டு வீடு வந்து, முன்பு போல் இல்லற வாழ்க்கை நடத்தினார். சிவ பூஜையும், அடியவர் பூஜையுமாக நாட்கள் நகர்ந்தன.
சிவத்தல யாத்திரை செய்து கொண்டு வந்த திருஞானசம்பந்தர் ஒருநாள், அடியார் கூட்டத்துடன் சாத்தமங்கை வந்தடைந்தார். திருநீலநக்கர் ஊர் முழுவதும் தோரணம் கட்டி, பந்தல்கள் அமைத்து அவர்களை உபசரித்து, உணவு அளித்தார். அன்று இரவு திருஞானசம்பந்தர் திருநீலநக்கர் இல்லத்தில் தங்கினார். தம்முடன் வந்திருக்கும் திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கும் இல்லத்திலேயே தங்க இடம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். உடனே திருநீலநக்கர் சற்றும் தயங்காமல், தாம் செய்யும் வேள்விக் குண்டத்திற்கு அருகில் யாழ்ப்பாணருக்கு உறங்க இடம் அளித்தார். அகமகிழ்ந்தார் ஞானசம்பந்தர். அடுத்த நாள் காலை, நதியில் நீராடி இறைவனைத் துதி பாடி, திருநீலநக்கரையும் பாடி சிறப்பித்தார் சம்பந்தர்.
அதன் பிறகு, திருநீலநக்கர் அவ்வப்பொழுது, சம்பந்தர் இருக்கும் தலங்களுக்குச் சென்று, சில நாட்கள் அவருடன் தங்குவார். அவர்களுடைய நட்பு முதிர்ந்தது. இறுதியில், ஞானசம்பந்தரின் திருமணத்திற்குச் சென்ற திருநீலநக்கர், அங்கு தோன்றிய ஜோதியில் கலந்து சிவனடி சேர்ந்தார்.
ஆதாரம் (References) :
shaivam.org
நாயன்மார் கதை (முதல் மற்றும் இரண்டாம் பாகம்), கி. வா. ஜகந்நாதன், மூன்றாம் பதிப்பு, அல்லயன்ஸ் பதிப்பகம்.