நமிநந்தியடிகள் நாயனார்

திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் உள்ள ஏமப்போரூரில் அவதரித்த நமிநந்தியடிகள், ஒரு சிறந்த சிவபக்தர். வேதங்கள் பயின்றவர். இரவும் பகலும் இறைவன் திருவடியையே நினைந்திருந்தவர். அவருக்குத் திருவாரூர் சென்று சிவபெருமானை வழிபடும் வழக்கம் இருந்தது. அந்தத் திருவாரூர் கோவிலில் பல சந்நிதிகள் உண்டு. அவற்றில் நமி நந்திக்குப் பிடித்த சந்நிதி அரநெறியார் சந்நிதி. அங்கு அழகாக விளக்குகள் ஏற்றி, அனைவரும் வந்து வழிபட வகை செய்ய வேண்டும் என்று விரும்பினார்.

அதனால், கோயிலுக்கு அருகில் உள்ள வீடுகளுக்குச் சென்று விளக்கேற்ற எண்ணெய் வாங்கி வரலாம் என்றெண்ணி, அருகில் இருந்த சமணர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்தார். அவ்வீட்டாரிடம், “கோயிலில் விளக்கேற்ற எண்ணெய் வேண்டும்” என்று கேட்டார். அதற்கு அவர்கள் மிகவும் ஏளனமாக, “திருக்குளத்தில் நிறைய நீர் இருக்கிறதே, அதை ஊற்றி ஏற்றுங்கள்” என்று கூறி எண்ணெய் கொடுக்க மறுத்துவிட்டார்கள். அதைக் கேட்ட நமிநந்தியடிகள், மிகுந்த வருத்தத்துடன் கோயிலுக்குச் சென்று அரநெறிப் பெருமானிடம், ‘விளக்கேற்ற வழியில்லையோ?’ என்று வருந்தி வேண்டினார். அப்பொழுது ஒரு அசரீரிக் குரல் கேட்டது. “நீ கவலை அடைய வேண்டாம். கோயில் திருக்குளத்தில் உள்ள நீரை எடுத்து வந்து விளக்கேற்று” என்றுறைத்தது. பெருமகிழ்ச்சி அடைந்த நமிநந்தியடிகள், உடனே திருக்குளத்திற்கு ஓடிச்சென்று, இறைநாமத்தைக் கூறியபடியே நீர் எடுத்து வந்து அகலில் ஊற்றி, திரி போட்டு விளக்கேற்றினார். அதிசயத்திலும் அதிசயம்! விளக்கு ப்ரகாசமாக எரிந்தது. குளம் நிறைய நீர் இருக்கும் பொழுது அவருக்கு என்ன கவலை? கோயில் முழுவதும் விளக்குகள் ஏற்றி வைத்தார்.

இதுபோல் பல காலம் நீர் ஊற்றி விளக்கு ஏற்றி, திருவாரூர் கோயிலை ஒளியூட்டினார். செய்தி ஊரெல்லாம் பரவி, சோழ அரசன் காதுகளுக்கும் எட்டியது. அகமகிழ்ந்த அரசன், அவரைத் திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்குப் பொறுப்பாளராக நியமித்தார்.

சோழ அரசர், அக்கோவிலின் பங்குனி உத்திரத் திருவிழாவை வெகு விமர்சையாக நடத்துவது வழக்கம். திருவிழாவின் போது, தியாகராஜர் ‘மணலி’ என்ற ஊரில் திறந்த வெளியில் எழுந்தருளுவார். உயர்ந்தோர், தாழ்ந்தோர் எனப் பேதமின்றி மக்கள் அனைவரும் அங்கே ஒன்று திரண்டு கொண்டாடுவது வழக்கம்.

அப்படி ஒரு முறை, திருவிழா நடந்த சமயம், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தின் நடுவில் இருந்த நமிநந்தி அடிகள் திருவிழா முடிந்து வீடு திரும்பியதும், வீட்டிற்குள் நுழையாமல் வெளியிலேயே அமர்ந்தார். மனைவியை அழைத்து, “தண்ணீர் எடுத்து வா. பல தரப் பட்ட மக்கள் கூட்டத்தின் நடுவில் இருந்ததால் குளித்துவிட்டு தான் பூஜை செய்ய வேண்டும்” என்றார். மனைவி உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வருவதற்குள் தூக்கம் அவரை ஆட் கொண்டது. கனவும் வந்தது. கனவில் தோன்றிய சிவபெருமான், “நந்தியாரே! திருவாரூரில் பிறந்த அனைவருமே சிவகணங்கள் ஆவர். நீங்கள் நினைப்பது போல் அவர்கள் தீண்டத்தகாதவர்கள் அல்லர். நீங்களே உங்கள் கண்களால் காண்பீர்!” என்று கூறி மறைந்தார். கண் விழித்து எழுந்த நமிநந்தியார் நடந்தவற்றை மனைவியிடம் கூறி, தன் தவறான எண்ணத்தை நினைத்து வருந்தினார். உடனே வீட்டில் பூஜை செய்யலானர்.

அடுத்த நாள் காலை, திருவாரூர் சென்றவருக்கு ஒரு தெய்வீக அதிர்ச்சி காத்திருந்தது. அவ்வூர் மக்கள் அனைவரும் சிவகணங்களாகத் தெரிந்தனர். உடனே நமிநந்தி அவர்களை நமஸ்கரித்தார். சில நிமிடங்களில், அவர்கள் சுய உருவம் பெற்றனர். சிவபெருமானின் லீலையை நினைந்து மனமுருகினார். இதன் பிறகு, நமிநந்தியார் திருவாரூரிலேயே தங்கிவிட்டார். இவ்வாறு பல காலம் திருவிளக்குத் தொண்டும், மற்றும் பிற தொண்டுகளும் செய்து, அப்பரால் ‘ஆனிப்பொன்’ என்று போற்றப்பட்ட நமிநந்தியடிகள், நீடூழி வாழ்ந்து, சிவனடி சேர்ந்தார்.

ஆதாரம் (References) :
shaivam.org
நாயன்மார் கதை (முதல் மற்றும் இரண்டாம் பாகம்), கி. வா. ஜகந்நாதன், மூன்றாம் பதிப்பு, அல்லயன்ஸ் பதிப்பகம்.

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0