முருகநாயனார்

நாகை மாவட்டம், திருப்புகலூரில் அக்னீஸ்வரர் ஆலயத்தில் பிரதான சந்நிதியைத் தவிர பூதேசுவரர், வர்த்தமனேசுவரர், பவிஷ்யேசுவரர் என மூன்று சந்நிதிகள் உண்டு. இத்திருப்புகலூரில் அந்தணர் மரபில் உதித்தவர் முருகனார். இவர் எப்பொழுதும் இறை சிந்தனையில் இருப்பவர். சிவபெருமானுக்கு உரிய பூ மாலைகளைச் சாத்தும் பணியை முருகனார் செய்து வந்தார்.

அவர் விடியலுக்கு முன் எழுந்து, நீராடிப் பின் நந்தவனம் சென்று கொடிப்பூ, கோட்டுப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ என்னும் நான்கு வகையான பூக்களைப் பறித்துப் பூக்கூடைகளில் கொணர்வார். அவற்றை தூய்மையான இடத்தில் கொணர்ந்து வைத்துக் கொண்டு, இறைவனின் அலங்காரத்திற்கு ஏற்ப, இண்டைமாலை, கோவை மாலை, பத்துமாலை, கொண்டை மாலை, சரமாலை, தொங்குமாலை என்னும் ஆறு வகையான மாலைகளை ஆறு பூஜை காலத்திற்கு ஒன்று வீதம் தொடுப்பார்.

பின்னர் மாலைகளை கோயிலுக்கு எடுத்துச் சென்று இறைவனுக்குச் சாற்றி, அழகு பார்த்துக் கண்ணீர் மல்க நின்று உருகுவார். இத்திருப்பணி தவிர எப்போதும் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை இடைவிடாது ஓதிக்கொண்டே இருப்பார்.

முருகனாருக்கு வர்த்தமானீச்சுரத்தில் மிகுதியான ஈடுபாடு. அந்தச் சந்நிதியில் இந்த மலர்த் தொண்டை தடையின்றி செய்து வந்தார்.

திருப்புகலூரில் அவர் கட்டிய மடத்தில் திருஞான சம்பந்தர், அப்பர், சிறு தொண்டர், திருநீலநக்கர் ஆகியோர் வந்து தங்கினார்கள். திருஞான சம்பந்தர் முருகனாரின் திருதொண்டைக் கண்டு அவர் மேல் அன்பு கொண்டார். அவர் வர்த்தமனேசுவரத்தில் பாடிய திருப்பதிகத்தில் முருக நாயனார் தொண்டை சிறப்பித்து இரண்டு இடங்களில் பாடியுள்ளார்.

திருநல்லூரில் நடைபெற்ற திருஞான சம்பந்தரின் திருமணத்திற்கு முருக நாயனார் சென்றார். இறைவன் திருவருளால் அப்போது எழுந்த சோதியில் திருஞான சம்பந்தரும் பிறரும் புகுந்த போது இவரும் புகுந்து இறைவன் திருவடியை அடைந்தார்.

முப்போதும் திருமேனி தீண்டும் உரிமையும் வேத ஆகம அறிவும் நிரம்பிய முருக நாயனார், பூ மாலை தொடுக்கும் தொண்டினைப் புரிந்தார். பஞ்சாக்ஷரத்தை ஜபிப்பதும், திருமாலைத் தொண்டு செய்வதும் முருக நாயனாருக்கு ஒன்றாகவே இருந்தன என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் (References) :
shaivam.org
நாயன்மார் கதை (முதல் மற்றும் இரண்டாம் பாகம்), கி. வா. ஜகந்நாதன், மூன்றாம் பதிப்பு, அல்லயன்ஸ் பதிப்பகம்.

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0