குங்கிலியக்கலய நாயனார்
கும்பகோணத்திற்கு அருகே உள்ள திருக்கடவூரில், அந்தணர் குலத்தில் அவதரித்த கலயனார், ஒரு சிறந்த சிவபக்தர். அவர் திருக்கடவூர் ஆலயத்தில், எம்பெருமான் சந்நிதியில் குங்கிலியத் தூபமிடும் திருத்தொண்டைச் செய்து வந்தார். அவர் எப்பொழுதும் குங்கிலிய தூபக் கலயத்தை(சட்டி) கையில் ஏந்தியவாறு இருந்ததால், அவருக்கு ‘குங்கிலியக் கலய நாயனார்’ என்ற பெயர் வந்தது.
அவருடைய பக்தியை உலகுக்குணர்த்த எண்ணிய ஈசன், அவரை வறுமை அடையச் செய்தார். ஆனால் கலயனாரோ, தமக்கு வேண்டிய பொருள்களைக் குறைத்துக் கொண்டாரேயன்றி, இறைவனுக்கு இடும் குங்கிலியத் தூபத்தைக் குறைக்கவில்லை.
வறுமை வளரவே, தம்முடைய மாடு, மனை, நிலங்களை விற்றார். கடைசியில் ஒன்றும் இல்லாமல் போயிற்று. அப்போது அவருடைய மனைவியார், தன் கழுத்தில் இருந்த திருமாங்கல்யத்தைக் கழற்றி கலயனாரிடம் கொடுத்து, அதனை விற்று நெல் வாங்கி வரச் சொல்லி அனுப்பினார். கலயனாரும் நெல் வாங்கப் புறப்பட்டார்.
அவர் தெருவில் வந்து கொண்டிருக்கையில், எதிரே ஒரு வணிகன் குங்கிலிய மூட்டையை எடுத்து வந்தான். அதைக் கண்டக் கலயனார், ‘எல்லாம் ஈசன் செயல்’ என்று வியந்தார். தாம் வந்த வேலையை மறந்து, வணிகனிடம் பொன் மாங்கல்யத்தைக் கொடுத்து, குங்கிலியப் பொதியைப் பெற்றுக் கொண்டு நேராகக் கோயிலுக்குச் சென்றார். எம்பெருமானுக்குக் குங்கிலிய தூபமிட்டு, அகமகிழ்ந்து அங்கேயே தங்கிவிட்டார்.
இரவு வந்தது. வீட்டில் கலயனாருடைய மனைவியாரும், பிள்ளைகளும் பசியால் வாடி, உறங்கிவிட்டனர். அப்போது இறைவன் திருவருளால் வீட்டில் நெல்லும், பொன்னும், ஆடையும், அணியும் நிரம்பின. கனவில் கலயனாருடைய மனைவியாருக்கும், கோயிலில் இருந்த கலயனாருக்கும் ஈசன் இச்செய்தியை அறிவித்தான். அப்பெண்மணி எழுந்து பார்க்கையில், வீடு முழுவதும் பொருட்கள் நிரம்பி இருப்பதைக் கண்டார். உடனே சமைக்கத் தொடங்கினார். ஆலயத்தில் இருந்து திரும்பிய கலயனாரும், தம் மனையில் இறைவன் திருவருளால் நிகழ்ந்தவற்றைக் கண்டு மகிழ்ந்தார். பிறகு வழக்கம் போல் தம்முடைய திருத்தொண்டைக் குறைவின்றிச் செய்து வந்தார்.
காலம் கழிந்தது. திருப்பனந்தாள் என்னும் தலத்தில் பூசை புரிந்து வந்த பூசாரி, ஒரு நாள் வெளியூருக்குச் செல்ல வேண்டியிருந்தது. அதனால் தன் மகளிடம் அன்று கோயிலில் பூசை செய்யுமாறுக் கூறினார். அவளும் பூசைக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு, கோயிலுக்குச் சென்று இறைவனுக்கு அபிஷேகம் செய்த பிறகு, மாலையை இறைவனுக்கு அணிவிக்க எடுத்தாள். அப்போது அவளது இடையில் இருந்த ஆடை நழுவவே, முழங்கையால் ஆடையை இடுக்கிக் கொண்டு மாலையைப் போட முடியாமல் தவித்தாள். குழந்தையின் உணர்ச்சியைக் கண்ட இறைவன் சற்று வளைந்தான். குழந்தையும் மாலையைச் சாற்றிவிட்டு, மகிழ்ச்சியோடு வீடு திரும்பினாள்.
மறுநாள் அவளுடைய தந்தை வந்து பார்த்த போது சிவலிங்கம் சாய்ந்திருப்பதைக் கண்டு வியந்து, மீண்டும் சிவலிங்கத்தை நேரே நிமிர்த்திப் பார்த்தார். முடியவில்லை. இந்தச் செய்தி நாடெங்கும் பரவியது. செய்தி அறிந்த சோழ மன்னன், தன் யானை, குதிரைப் படையுடன் வந்து, சிவலிங்கத்தின் மேல் கயிற்றைக் கட்டி யானையைக் கொண்டு இழுக்கச் செய்தான். யார் இழுத்தாலும் சிவலிங்கம் நிமிரவில்லை.
இச்செய்தி கலயனாருக்கும் எட்டியது. அவர் உடனே திருப்பனந்தாள் சென்று, சிவலிங்கத்தில் ஒரு மணிக் கயிற்றைக் கட்டி மறு நுனியை தன் கழுத்தில் கட்டிக்கொண்டு இழுத்தார். கலயனாருடைய அன்புக்கு அடிமையானான் இறைவன். அவர் இழுக்கத் தொடங்கியதுமே சிவலிங்கம் நிமிர்ந்தது.
குழந்தையின் அன்புக்காக வளைந்த பெருமான் குங்கிலியக்கலய நாயனாரின் அன்பு கண்டு நிமிர்ந்தார். அதைக் கண்ட எல்லோரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.
கலயனார் இறைவனுக்குரிய குங்கிலியத் திருத்தொண்டை நெடுநாள் செய்துகொண்டு வாழ்ந்து, குங்கிலியக் கலய நாயனாராகப் போற்றப்பட்டு, இறைவன் திருவடி நிழலில் இணைந்து பேரின்ப வாழ்வு பெற்றார்.
ஆதாரம் (References) :
shaivam.org
நாயன்மார் கதை (முதல் மற்றும் இரண்டாம் பாகம்), கி. வா. ஜகந்நாதன், மூன்றாம் பதிப்பு, அல்லயன்ஸ் பதிப்பகம்.