ஆனாய நாயனார்

திருச்சி மாவட்டம், திருமங்கலம் எனும் ஊரில் ஆயர் குலத்தில் அவதரித்த ஆனாயர் சிவபெருமானிடம் ஆழ்ந்த பக்தி உடையவர்.

அவர் காலை வேளையில் பசுக்களை முல்லை நிலத்துக் காடுகளில் மேய விட்டு மாலையில் அழைத்து வருவார். பசுக்கள் மேய்ந்து கொண்டிருக்கும் நேரங்களில் சிவபெருமானை மனதில் நினைத்து புல்லாங்குழல் இசைப்பதை வழிபாடாகக் கொண்டு வாழ்ந்தார்.

ஒருநாள் பசுக்களுடன் காட்டுக்கு வந்த ஆனாயர் தம் எதிரிலே பொன்னிற மலர்கள் பூத்துக் குலுங்கும் கொன்றை மரம் ஒன்றைக் கண்டார். கொத்துக் கொத்தாக பூக்கள் நிறைந்து விளங்கிய கொன்றை மரத்தைக் கண்டவுடன், ஆனாயருக்கு சிவபெருமானே நேரில் நிற்பது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. அவரிடம் இயல்பாக இருந்த பக்தி பொங்கி எழுந்தது. உடனே அம்மரத்தின் அருகில் சென்று தம் குழலை எடுத்து திருவைந்தெழுத்தை (பஞ்சாக்ஷரம்) இசையுடன் அமைத்து வாசிக்கத் தொடங்கினார்.

இறைவனைக் கண்ட மகிழ்ச்சியில் புல்லாங்குழல் எடுத்து நாட்கள் செல்வது கூடத்தெரியாத அளவுக்கு ஆனாயர் மெய்மறந்து வாசித்துக் கொண்டேயிருந்தார். அவரது வாசிப்பில் விலங்குகளும், பறவைகளும், நகரங்களில் வசிப்பவரும், தெய்வங்களும், தேவர்களும் மெய் மறக்க; அருவிகளும், காட்டாறுகளும் ஓடாமல் நிற்க; இயற்கையே மயங்கிப் போனது. மயிலும் பாம்பும், சிங்கமும் யானையும், புலியும் மானும் பகைமையை மறந்து அங்கே ஒன்றாய் உலவின. இறுதியில் சிவபெருமானும், இசையில் மகிழ்ந்து உமாதேவியோடு ரிஷப வாகனத்தில் ஆனாயர் முன் எழுந்தருளினார். அவரது பக்தியை வியந்து, ‘இந்த நிலையிலேயே நம்மிடம் வருவாயாக!’ என்று அருளினார்.

தேவர்கள் மலர் மாரி பொழியவும் முனிவர்கள் வேத முழக்கம் செய்யவும் ஆனாய நாயனார் புல்லாங்குழல் இசைத்தபடியே சிவபெருமானுடன் சென்று மீளாத பேரின்ப வாழ்வு பெற்றார்.

கலையில் திறமையுடையவர்கள் அந்தக் கலையை இறைவனுக்கே உரிமை ஆக்கினால் மற்றவர்களை இன்புறச் செய்வதோடு தாமும் பேரின்பத்தை அடையலாம்.

ஆனாயர், கலையை இறைவனுக்கு அர்ப்பணம் செய்ததால், அந்தக் கலை அவர் இருந்த நிலத்தில் அனைத்து உயிரினங்களிடத்தும், இயற்கையான பகைமையை மறக்கச் செய்து, ஒரே உணர்வை அடைய வழி வகுத்தது.

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0