சண்டேசுவர நாயனார்

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருச்சேய்ஞலூரில் அவதரித்த விசாரசருமர் பிற்காலத்தில் ‘சண்டேசுவர நாயனார்’ எனப் போற்றப்பட்டார். சிறு வயது முதல் சிவபெருமானை முழு முதற்கடவுளாகப் போற்றி வணங்கினார்.
ஒரு நாள் திடலில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார் விசாரசருமர். அப்போது பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன், அவற்றைத் தடியால் அடித்தான். அதைக் கண்டு பரிதவித்த விசாரசருமர் அச்சிறுவனைத் தடுத்தார். பின் தானே பசுக்களை மேய்க்கும் பொறுப்பினை ஏற்றார்.
பசுக்களின் மேன்மையை உணர்ந்த விசாரசருமர் வளமான புல்வெளியில் அவைகளை மேய விட்டும், நல்ல நீருள்ள நீரோடைகளில் நீர் அருந்தச் செய்தும் அவற்றைக் கண்ணும் கருத்துமாகப் போற்றி வந்தார். அதனால் பசுக்கள் முன்பை விட நிரம்பப் பாலைப் பொழிந்தன. அவை விசாரசருமரிடம் அன்புடையனவாகி அவரை நக்கிக் கொடுத்தும், அவர் மேல் உராய்ந்தும், மடியிலிருந்து பாலைப் பொழிந்தும் தம் அன்பைப் புலப்படுத்தின.
இப்பசுக்கள் தாமாகவே பால் பொழிவதைக் கண்ட விசாரசருமருக்கு முற்பிறவியின் உணர்ச்சியினால், இப்பாலினால் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. பாலைக் குடங்களில் நிரப்பி, மணியாற்றங்கரையில் மண்ணால் சிவலிங்கம் செய்து தினமும் அபிஷேகம் செய்து வழிபட்டார். அவ்வாறு அவர் பூசை செய்யும் பொழுது புறஉணர்வை மறந்து இறையுணர்வில் இருப்பது வழக்கமாயிற்று. இந்த பூசைக்குப் பால் வழங்குவதால் வீட்டில் கறக்கும் பசும்பாலின் அளவு குறையவில்லை. அதிசயத்தக்க வகையில் மிகுதியாயிற்று.
ஒரு நாள் அவ்வழியில் சென்ற வழிப்போக்கர் விசாரசருமரின் பூசையைக் கண்டார். விளையாட்டாக விசாரசருமர் பாலைத் தரையில் ஊற்றி வீணடிப்பதாக எண்ணி, அவ்வாறே ஊராரிடம் சொல்லிச் சென்றார். அதைக் கேட்ட பசுக்களின் சொந்தக்காரர்கள் விசாரசருமரின் தந்தையிடம் சென்று புகார் தந்தனர். தந்தையார் எச்சதத்தன் அனைவரிடமும் மன்னிப்புக் கோரி, தன்னுடைய மகனைக் கண்டிக்க அவர் இருக்கும் இடம் நோக்கிச் சென்றார்.
அங்கு விசாரசருமர் மணலில் சிவலிங்கம் செய்து அதற்குப் பூச்சூடி பாலால் அபிஷேகம் செய்து கொண்டிருந்ததைக் கண்டார். எச்சதத்தன் விசாரசருமரை அழைத்தும் பலனில்லாமல் போக கோபத்தில் தன் புதல்வனின் முதுகில் கோலால் அடித்தார். தேக உணர்வை மறந்து பூசையில் ஈடுபட்டு இருந்த விசாரசருமர் அந்த அடி உரைக்கவும் இல்லை, பூசையை நிறுத்தவும் இல்லை.
பின்னும் கோபம் உச்சமாக, எச்சதத்தன் அபிசேகப் பாற்குடங்களை எட்டி உதைத்தார். சிவபெருமானுக்கு அபிசேகம் செய்ய வைத்திருந்த பொருளை எட்டி உதைத்து சிவாபராதம் செய்ததை விசாரசருமரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே கையில் கிடைத்தக் கோலை எடுத்து வீசினார். சிவனருளால் அது மழுவாக மாறி எச்சதத்தனின் கால்களை வெட்டியது. எம்பெருமானின் ஆயுதத்தால் அடிபட்ட எச்சதத்தன், பாவம் நீங்கி சிவலோகப் பதவியை அடைந்தான்.
அதே சமயத்தில் சிவபெருமான் தோன்றி “உனக்கு அம்மையும் அப்பனும் நானே” என்று கூறி கொன்றை மாலையைத் தலையில் சூடி விசாரசருமருக்கு சண்டேசுரப்பதம் அருளினார். மேலும் சிவனடியார்களாகிய மாகேசுவரர்களுக்குத் தலைவனாக பிரதம மகேசுவரனாக விளங்கச் செய்தார். அன்று முதல் விசாரசருமர் ‘சண்டேசர்’ ஆனார்.
விசாரசருமருக்கு சிவ பூசையே விளையாட்டின்பத்தைத் தந்தது. ஒருமனதோடு செய்த பூசையே தவமும் ஆயிற்று. அதனால் இறைவனிடத்தில் உயர் பதவி கிட்டியது.
ஆதாரம் (References) :
shaivam.org
நாயன்மார் கதை (முதல் மற்றும் இரண்டாம் பாகம்), கி. வா. ஜகந்நாதன், மூன்றாம் பதிப்பு, அல்லயன்ஸ் பதிப்பகம்.
Help Desk Number: